×

நாகை, தஞ்சை கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் ஒரு லட்சம் ஏக்கர் குறுவை நெல் நட முடியாத அவலம்: விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 2வாரங்களாகியும் நாகை, தஞ்சை கடைமடை பகுதிகளுக்கு இதுவரை வராததால், ஒரு லட்சம் ஏக்கர் குறுவை நெல் நட முடியாத அவலம் உள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளன. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 28ம் தேதி மூடப்படும். இந்த கால கட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு பின்னர் கடந்த 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது.

இதில் பெரும்பான்மையான ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும், ஆறுகளில் கால தாமதமாக பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது பாலப்பணிகள் முடியாததாலும் ஆறுகளில் தண்ணீர் திறக்காமல் உள்ளது. இந்நிலையில், பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர். நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நெல் விதைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் முளைத்தால் தான் அடுத்து தாளடியும், அதைத் தொடர்ந்து உளுந்து, பயறு பயிர்கள் சாகுபடி செய்யலாம். தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு 105 நாள் முதல் 115 நாள் வயதுடைய நெல் விதைகளான கோ. 51, ஏ.டீ.டி. 43, ஏ.டீ.டி. 45, ஏ.எஸ்.டி. 16, டி.பி.எஸ். 5 ஆகிய நெல் ரகங்களை பெரும்பான்மையான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர்.

நேரடி நெல் விதைப்பு செய்தால் அதன் வயதில் 10நாட்களுக்கு முன்பே அறுவடைக்கு வந்து விடும். போர்வெல் வசதி உள்ள சில விவசாயிகள் நடவு செய்ய நாற்றங்காலில் நாற்று விட்டு வைத்துள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் நேரடி நெல் விதைப்பு செய்த குறுவை நெல் விதைகள் முளைத்தால் தான் அக்டோபர் முதல் வாரத்தில் அறுவடை செய்து உடன் தாளடி நடவு பணியை முடித்து பருவ மழை, கன மழை, வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கலாம். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து மழைக்காகவும், மேட்டூர் அணை தண்ணீருக்காவும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு 2 வாரமாகிறது. கல்லணை திறந்து 10 நாட்களாகிறது. கல்லணை திறந்து 3 நாட்களிலே நாகை மாவட்டத்தில் கடைமடைக்கு தண்ணீர் வந்துவிடும். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் சித்தாறு, வெட்டாறு, கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெள்ளையாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் வரவில்லை. சில ஆறுகளில் வரும் தண்ணீர் குறைந்த அளவில் வருவதால் ஆறுகளில் இருந்து வாய்க்கால்களில் ஏறி செல்லும் அளவிற்கு தண்ணீர் வராததால் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் உள்ளது. இதனால் நேரடி செய்யப்பட்ட குறுவை நெல் விதைகளை முளைக்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயத்தில் உள்ளது.

காலதாமதமாக குறுவை நெல் விதையை முளைக்க வைத்தால் அக்டோபர் மாத பருவ, கன மழையில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன், தாளடி பயிர் செய்வதும் பாதிக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இதேபோல்
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் சிஎம்பி , வாய்க்கால், சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளான பள்ளத்தூர், ஆண்டிகாடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கழனிவாசல், முதுகாடு,

மணக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்களில் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் குறுவை நெல் நட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக விவசாய சங்க கூட்டி இயக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் கூறுகையில், ‘‘மேட்டூர் அணையிலிருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு கல்லணையிலிருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தால் மட்டுமே விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி விரைவாக செய்து முடிக்க முடியும். தற்போது குறுவை நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நாற்று விட்டு நடவு செய்வதற்கு தயாராக உள்ளனர். கல்லணையில் தற்போது முறைவைத்து தண்ணீர் திறந்துவிடபட்டாலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

இதனால் குறுவை நெல் சாகுபடி பெரும் பாதிப்பை சந்திக்க இருக்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு இதை கவனத்தில் கொண்டு பரிசீலித்து குறைந்தது ஒரு மாதத்திற்காவது 3000 கன அடி தண்ணீரை திறந்து திறந்து விட்டு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வர செய்ய வேண்டும் என்றார். மேட்டூர் அணையிலிருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு கல்லணையிலிருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தால் மட்டுமே டெல்டாவில் குறுவை நெல் சாகுபடி விரைவாக செய்து முடிக்க முடியும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

* மேட்டூர் அணை திறக்கப்பட்டு 2 வாரமாகிறது.
* கல்லணை திறந்து 10 நாட்களாகிறது.
* கல்லணை திறந்து 3 நாட்களிலே நாகை மாவட்டத்தில் கடை மடைக்கு தண்ணீர் வந்துவிடும்.
* ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வந்து சேரவில்லை.



Tags : Nagai ,area ,Tanjarmalai ,Tanjore , Naga, Tanjore Shop, Area Rice, Farmer, Livelihood
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு