×

நாடு முழுவதும் 3 மாதமாக நீடிக்கும் ஊரடங்கால் முடங்கிய தபால் போக்குவரத்து

சேலம்: நாடு முழுவதும் 3 மாதமாக நீடித்துள்ள தொடர் ஊரடங்கால் தபால் போக்குவரத்து முடங்கி வருகிறது. தமிழகத்தில் பஸ் இயக்கம் இருப்பதால், பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது. தகவல் பரிமாற்றத்தின் இயந்திரமாக விளங்கும் தபால்துறை, கடந்த 3 மாதமாக கொரோனா ஊரடங்கின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இந்திய தபால்துறை,1854ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 1.54 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன.அரசின் முக்கிய தகவல்களையும், செய்திகளையும், உறவுகளிடையே நலம் விசாரிப்புகளையும் கடிதங்களாக தாங்கிச் சென்று, அனைவருக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் தபால்துறையில்,பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.

பிரதான சேவையாக கடித போக்குவரத்து இருக்கிறது.அரசின் தகவல் பரிமாற்றம் முழுமையாக தபால்துறையை சார்ந்தே உள்ளது. இச்சூழலில் கடந்த மார்ச் 24ம் தேதி,கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.இந்த ஊரடங்கு,5வது முறையாக நீட்டிக்கப்பட்டு, தற்போதும் அமலில் இருக்கிறது. தபால்களை அனுப்ப பெரும் உதவியாக விளங்கும் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தபால்துறையின் செயல்பாடு பெருமளவு முடங்கியது. இருப்பினும்,தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற தபால்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஆனால்,கடித போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்து,முடங்கி வருகிறது.

வழக்கமாக நாடு முழுவதும் ஒருநாளைக்கு சுமார் 3 லட்சம் தபால்கள் பட்டுவாடா செய்யப்படும். இதுவே கடந்த ஏப்ரல் மாதத்தில் முற்றிலும் முடங்கி,ஆயிரக்கணக்கில் வந்து நின்றது. அடுத்தடுத்த மாதங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் மூலம் மீண்டும் தபால் போக்குவரத்து சீரடையும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.இருப்பினும் தற்போது வரை பாதியளவே சீராகியுள்ளது. பழைய நிலையை அடைய வேண்டும் என்றால்,ரயில் இயக்கம் மீண்டும் அமலுக்கு வந்தால் தான் முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரில் இருந்தும் மற்ற ஊர்களுக்கு பஸ் மற்றும் தபால்துறை வாகனங்கள் மூலம் தபால் பண்டல்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

அதிலும் தற்போது,மாவட்டத்திற்குள் மட்டும் பஸ் இயக்கம் என மாநில அரசு அறிவித்திருப்பதால்,மீண்டும் தபால் சேவையில் சற்று பின்னடைவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தினமும் தபால்நிலையங்களுக்கு பதிவு தபால், விரைவு தபால், சாதாரண தபால், மணியார்டர் அனுப்ப வரும் நபர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. சேலம் கிழக்கு மற்றும் மேற்கு கோட்ட தபால்நிலையங்களுக்கு வழக்கமாக ஒரு மாதத்தில் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் தபால்களை கையாள்வார்கள்.ஆனால் இது,முழு ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் மாதத்தில் 10 சதவீதத்திற்கும் கீழாக குறைந்தது.தற்போது 60 சதவீத பட்டுவாடா நடக்கிறது.

இதுபற்றி தபால்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘பொது ஊரடங்கால், தபால் போக்குவரத்தில் பாதிப்பு இருக்கிறது.விரைவு தபால், பதிவு தபால்,மணியார்டர் போன்றவற்றை தொடர்ந்து கையாள்கிறோம். இதனால்,தபால் சேவை தற்போது மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. ஊரடங்கு முடிந்து, ரயில், பஸ் இயக்கம் முழுமையாக அமலுக்கு வந்தபின்னர்,வழக்கம் போல் தபால் சேவை இருக்கும்,’’  என்றனர்.

போஸ்ட் பேமெண்டிற்கு முக்கியத்துவம்
தபால்நிலையங்களில் போஸ்ட் பேமெண்ட் வங்கி இயங்கி வருகிறது. இதில், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கொரோனா ஊரடங்கிலும்,வீட்டிற்கே நேரடியாக சென்று பணத்தை பட்டுவாடா செய்வதில் தபால்துறை சிறந்து விளங்குகிறது.அதிலும்,ஆதார் எண்ணை கொண்டு,எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் ₹10 ஆயிரம் வரை தபால்காரரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தி மக்களுக்கு தபால்துறை சேவையாற்றுகிறது.

* இந்தியாவில் 1.54 லட்சம் தபால்நிலையங்கள் உள்ளன.இதில்,5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
* நவீனயுகத்திற்கு ஏற்ப தபால்துறையும் நவீனமயத்திற்கு மாற்றம் பெற்றுள்ளது.பார்சல் சர்வீஸ்,வங்கி சேவை,அங்காடி என பல்வேறு சேவையை வழங்குகிறது.
* தமிழகத்தில் 10,264 தபால்நிலையங்கள் உள்ளன.கிராமப்புறங்களில் அஞ்சலகங்கள் தான்,சேமிப்பு வங்கியாக இருக்கிறது.
* மின் கட்டணம் செலுத்தும் வசதியும் தபால் நிலையங்களில் உள்ளது.


Tags : country , Curfew, postal transport
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!