×

கோவாவில் கொரோனா சமூக பரவலாக மாறியது - முதல்வர் பிரமோத் சாவந்த் எச்சரிக்கை

கோவா: கோவாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவல் நிலையை அடைந்து விட்டதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களிலும் தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவாவில் மேலும் 44 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,039 ஆக உள்ளது. இதுவரை 370 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று யாரிடம் இருந்து யாருக்கு பரவியது என்பதை கண்டறிய முடியாத நிலையே சமூக பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த போதிலும், சமூக பரவலாக மாறவில்லை என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் கோவாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலையை அடைந்து விட்டதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், ‘கோவாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவுவது தெரிகிறது. அதனால் சமூக பரவல் ஏற்பட்டு விட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சில இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சமூகப் பரவல் ஏற்பட்டு விட்டதாக சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்த நிலையில் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. கொரோனா தொற்று சமூகப் பரவல் நிலையை அடையவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தெரிவித்தது. இந்நிலையில் கோவாவில் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டது என முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.



Tags : Corona ,Goa ,CM ,Pramod Sawant , Corona, Goa
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...