×

கொரோனா தொற்று எதிரொலி: தபால் வாக்குக்கான வயது வரம்பை 65-ஆக குறைத்தது தேர்தல் ஆணையம்!

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி 65 வயது நபர்களும் தபால் ஓட்டு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பாதிப்பானது உச்சத்தை அடையும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல போராடி வருகின்றன.

இந்நிலையில் தபால் வாக்குக்கான வயது வரம்பை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தலில் 80 வயது பூர்த்தியானவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டு இது தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் வயதானவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்ளும் என்பதால், 65 வயதானவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்கலாம் என மத்திய சட்டத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து, பீகார் மாநில சட்டசபை ஆயுட்காலம் நவம்பர் 29ம் தேதி முடிவடைகிறது.

அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் அங்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் முதியவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதால் தபால் வாக்கு செலுத்துவோரின் வயது 80ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் தபால் ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உச்சம் தொட்டு நிற்பதால் 65 வயதானோரை தபால் மூலம்  ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் மத்திய அரசை கேட்டிருந்தது. அதனை ஏற்று, 65 வயதுக்காரர்களுக்கு தபால் ஓட்டுரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Election Commission , Corona, Postal Vote, Election Commission
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...