×

கொரோனா பாதிக்கப்பட்டவரின் உடல் குன்னூர் வெலிங்டனில் அடக்கமா?... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

ஊட்டி: குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் கொரோனா கவச உடையணிந்த சிலரும், எவ்வித பாதுகாப்பும் இன்றி சிலரும் ஒரு உடலை அடக்கம் செய்யும் காட்சிகள் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தால், அவர்களின் உடல் மிகவும் பாதுகாப்பாக, பிளாஸ்டிக் உறைகளை கொண்டு மூடப்படுகிறது. மேலும், உடலை எடுத்துச் செல்பவர்களும், உடலை அடக்கம் செய்பவர்களும் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்தே அடக்கம் செய்ய வேண்டும். அதிகளவிலான ஆட்கள் இருத்தல் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நீலகிரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிலர் கவச உடைகளை அணிந்து நிற்கின்றனர்.

சிலர் எவ்வித பாதுகாப்பு உடைகளையும் அணியாமல் உள்ளனர். பாதுகாப்பு உடைகளை அணியாத சிலர் ஒரு பிளாஸ்டிக் கவரில் உள்ள உடலை எடுத்து குழிக்குள் வைக்கின்றனர். பின்னர், குழி முழுவதும் கிருமிநாசினி பவுடர் தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து, அந்த உடலை மண் போட்டு மூடுகின்றனர். இந்த காட்சிகள் குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் எடுக்கப்பட்டதாகவும், கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாகவும் அந்த வீடியோவில் வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு, இறந்த ஒருவரது உடலை வெளியில் தெரியாமல் அடக்கம் செய்துவிட்டனர் என்ற வதந்தியும் கிளம்பியுள்ளது.

இதனால், வெலிங்டன் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர். எனவே, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ளவர்கள் யார்?, அது எங்கு எடுக்கப்பட்ட வீடியோ? என்பதை உறுதி செய்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது பிற மாவட்டங்களுக்கும் பரவி மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Tags : victim ,Corona ,Coonoor Wellington , At Corona, Coonoor Wellington
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...