×

10 நாட்களுக்கு முன்பும் போலீஸ் தாக்கியதில் ஒருவர் மரணம் கொலைக்களமாக மாறிய சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன்?... வைரலாகும் ஆடியோ, வெளிவரும் உண்மைகள்

நெல்லை: சாத்தான்குளத்தில் போலீசாரின் தாக்குதலில் வியாபாரிகளான தந்தை, மகன் அடுத்தடுத்து இறந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பும் போலீசாரின் தாக்குதலில் ஒருவர் இறந்ததாக ‘ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ இருவரின் செல்போன் உரையாடல் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து இறந்தனர். சாத்தான்குளம் போலீசார் நடத்திய தாக்குதலில் தான் தந்தை, மகன் இறந்ததாக கூறி வியாபாரிகள், ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தந்தை, மகன் இறப்பிற்கு காரணமாக இருந்த எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் இருவர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.  எனினும் வியாபாரிகள் இருவரை தாக்கிய இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சாத்தான்குளம் போலீஸ் மீது அடுத்த புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் ‘ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ இருவர் பேசும்  ஆடியோ சமூக வளைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில்.

நண்பர்களான இருவர் பேசுவதாவது:
‘கொலையா பண்ணி விட்டான்’
 ‘கொலை பண்ணி விட்டால் கூட பிரச்னை வராது’
‘அவரை எங்கே வைத்து அடித்தார்கள், கீழேயா, மேலேயே’
‘மேல ரூம்ல வைத்து தான். நான் சொன்னேன் என்று வேறு யாரிடமும் சொல்லிடாதே’
‘அவரு மட்டும் தான் அடித்தாரா’
‘நம்ம ஆளுங்களும் எல்லாம் சேர்ந்து தான் அடித்தார்கள்’ என்று கூறி விட்டு இன்ஸ்பெக்டரை கடுமையாக திட்டுகிறார். ‘சும்மாவே அடி காணாது போடுங்க, போடுங்க நல்லா என இன்ஸ்பெக்டர் கூறுவார்.’ என்கிறார்.

‘இன்ஸ்பெக்டர் நல்லா அடிக்க தான் சொல்லுவார், எனக்கு தெரியும்’ அன்று ஒரு பெண்ணை அவர் அடிக்கச் சொல்லும் போதே இன்ஸ்பெக்டரை பற்றி எனக்கு தெரியும். புத்தி எப்படினு...’
‘இன்ஸ்பெக்டர் நள்ளிரவு 1.30 மணிக்கு ஒருத்தரை அடியுங்கள் என்றார். அதற்கு நாங்கள் சார், எங்களுக்கு ரொம்பவும் டயர்டாக உள்ளது. காலையில் வைத்துக் கொள்கிறோம். என்றோம்’
‘நம்மாளுங்க நான்கு பேர் அதில் இன்வால்வ் கிடையாது போல. சும்மா தான் சொல்றாங்க என நினைத்தேன்’
 ‘உண்டு..... ஆனா நீ யாரிடமும் சொல்லாதே’
‘அப்போ நீ ஊருக்கு போய் விட்ட, எங்க அண்ணனை அம்மா அனுப்ப வேண்டாம்னுட்டாங்க. அதற்கு அடுத்த நாள் தானே பிரச்னை, என்ன?’
‘பேய்க்குளம் கேஸ் ஒன்று சீரியசா இருக்காமே, பேய்க்குளத்தில் 2 பேரை அடிச்சீங்க, தெரியுமா, அதில் ஒருத்தன் செத்து போனான், அவன் கூட இன்னொருத்தனை அடிச்சாங்கள்ளா, அவன் தற்போது வாக்குமூலம் கொடுத்திருக்கான். போலீஸ் என்னை ரொம்ப கொடுமைப்படுத்தினாங்கனு, அவன் தான் இப்போ எல்லோருக்கும் பிளஸ் பாயிண்ட், அவன் இப்போது சீரியசாகி விட்டான்’

‘அவன அடிச்சு 10 நாள் கழித்து தானே செத்தான்’
‘இவன் சீரியாசாகி வாக்குமூலம் கொடுத்து விட்டான். இவனும் செத்தால், செத்தான் என போலீஸ் அதிகாரி ஒருவர் பெயரை கூறுகிறார். கேஸ் ரொம்ப ஸ்டிராங்காகி விடும். பேய்க்குளமும் கொந்தளித்து விடும்’
‘பேய்க்குளம் காரனும் செத்தா, மேட்டர் ரொம்ப சீரியசாகி விடும். ஒருத்தன் முதல்ல செத்தான். இவன் இப்போது சீரியஸ் கண்டிசனில் இருக்கான்’
‘சரி ஊர்ல யாரிடமும் சொல்லாதே’
‘நம்ம ஊரை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இல்ல. சரி.’
இத்துடன் இருவரின் உரையாடல் முடிகிறது. இந்த உரையாடல் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரது உடலையும் அடக்கம் செய்து விட்ேடாம் என போலீசார் நினைத்த நிலையில் இந்த உரையாடலால் போலீசுக்கு புதிய தலைவலி ஆகியுள்ளது.

பின்னணி என்ன?
சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ெஜயக்குமார் (39) கடந்த மே 18ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த துரை (38) என்பவரை சாத்தான்குளம் போலீசார் தேடி வந்தனர். துரையை போலீசார் தேடிச் சென்ற போது அவரது தம்பி மகேந்திரன் (27) என்பவரை அண்ணனுக்கு பதிலாக கடந்த மாதம் 24ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பிடித்துச் சென்றனர். இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடைய அண்ணன் துரை  (38) சாத்தான்குளம் போலீசில் மறுநாள் சரணடைந்தார். இதையடுத்து மறுநாள் 25ம் தேதி இரவு 10 மணிக்கு மகேந்திரனை விடுவித்தனர். மகேந்திரனை போலீசார் காவலில் வைத்து சராமாரியாக தாக்கியதில் அவருக்கு கடுமையான காயம் இருந்துள்ளது. ஆனால் போலீஸ் அவரை மிரட்டியதால் போலீசுக்கு பயந்து யாரிடமும் மகேந்திரன் சொல்லவில்லை.

பின்னர் 10 நாட்கள் கழித்து தூத்துக்குடியில் கட்டிட வேலைக்கு சென்ற மகேந்திரன் அங்கு மயங்கி விழுந்துள்ளார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்துள்ளது. அவரது உடல் அடக்கத்திற்கு சிறையில் இருந்த துரைக்கு ஒரு நாள் ஜாமீன் கிடைத்துள்ளது. இதன் மூலம் உடல் அடக்கத்தை போலீசார் கச்சிதமாக முடித்து விட்டனர். அத்தோடு மகேந்திரன் மரணம் கேட்பாரின்றி போனது. இந்நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் இறந்த நிலையில் மகேந்திரனின் உறவினர் பெருமாள் என்பவர், மகேந்திரனும் போலீஸ் தாக்குதலில் தான் இறந்ததாக சாத்தான்குளம் வந்த தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபலனிடம் மனு அளித்தார். மேலும் இதே கொலை வழக்கில்  கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம்  அருகேயுள்ள பனைகுளத்தை சேர்ந்த ராஜாசிங்கும் (36) கடந்த 24ம் தேதி  நெஞ்சுவலியால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த உரையாடலில் பேசிய ப்ரண்ட்ஸ் ஆப் போலீசார் இருவரும் இவர்கள் இருவரையே  குறிப்பிட்டுப் பேசியதாக தெரியவந்துள்ளது. இதனால் சாத்தான்குளத்தில்  மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : police station ,Satankulam ,murder ,police attackers ,death ground , Thisayanvilai. Police Station
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...