×

மேட்டூர் வனச்சரகத்தில் நோயால் அவதிப்படும் யானைக்கு சிகிச்சை: உயிரை காப்பாற்ற வனத்துறையினர் தீவிரம்

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரியதண்டா கிராமம் உள்ளது. தமிழக-கர்நாடக வனப்பகுதிகள் சந்திக்கும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இந்த கிராமம் உள்ளது. இங்குள்ள பச்சைப்பாலி ஓடை என்ற இடத்தில், கடந்த 3 நாட்களாக 6 வயது மதிக்கதக்க ஆண் யானை உடல் மெலிந்து நடக்க முடியாமல் விழுந்து கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அங்கு வந்த மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர், யானையை பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர் பிரகாஷ் பரிசோதித்தபோது, அந்த யானை குடல்புண் நோயால், உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, யானைக்கு ஊசி மூலம் உணவும், மருந்தும் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று யானையின் உடலில் 100 லிட்டர் தண்ணீர் மற்றும் 50 பாட்டில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.

 ஈரோடு மாவட்டம் வடபருகூர் வனப்பகுதியிலிருந்து, உணவு தேடி இந்த யானை மேட்டூர் வனச்சரகத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன், மேட்டூர் வனச்சரகத்தை ஒட்டிய ஈரோடு மாவட்ட வன எல்லையில், யானை ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. வனத்துறையினர் ரோந்து செல்லாததும், வன விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்காதது போன்ற காரணங்களால் யானைகள் நோய்வாய்பட்டும், வேட்டைக்காரர்களிடம் சிக்கியும் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட உயர் வன அலுவலர்கள் முகாமிட்டு, உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : forest reserve ,forest department ,Mettur ,Mettur Forest Area , Mettur Wildlife, Elephant, Therapy
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...