×

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு முதல் பத்திரிகையாளர் உயிரிழப்பு; துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!

சென்னை: தமிழகத்தில் நேற்று 3645 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 74622 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 46 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 957 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்போது ஊடக துறையினர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்களத்தில் நின்று செய்திகளை வழங்கி வரும் ஊடகத்துறையினரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் இப்படி பல்வேறு துறையினை சார்ந்தவர்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் என்பவர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஊடக துறையில் இருந்து மரணம் அடையும் முதல் பத்திரிகையாளர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 40 வயதுதான். 40 வயதிலேயே அவர் கொரோனா காரணமாக மரணம் அடைந்த சம்பவம் சக ஊடகத் துறை பணியாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணை முதல்வர் இரங்கல்;

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. திரு.வேல்முருகன் அவர்களது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுப் பணியில் ஈடுபடும் ஊடகத்துறை துறை நண்பர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்;

மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் #Covid19-ல் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்! முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத்  துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராமதாஸ் இரங்கல்;

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன் கொரோனா வைரஸ் தாக்குதலால் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும். கொரோனா காலத்தில் ஊடகத்துறையின் களப்பணியாளர்கள்  எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஊடகத்துறை உயிரிழப்பு வேல்முருகனோடு  முடியட்டும். ஊடகத்துறையினர் அனைவரும் இரு மடங்கு பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் இரங்கல்;

மூத்த ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் ஊடகத்துறையினர் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவதுடன், உடல்நலத்திலும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைபோல், கொரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

திருமாவளவன் இரங்கல்;

கொரோனாவுக்கு வேல்முருகன் பலி. பெரும் அச்சத்தையும் கவலையையும் அளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!ஊடகவியலாளர் வேல்முருகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் ராஜ் தொலைக்காட்சிக் குழுமத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் இரங்கல்;

ஊடக ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது  வேதனையளிக்கிறது, அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். ஊடகத்துறை நண்பர்களுக்கு எனது கனிவான அறிவுரை......களத்தில் மிக கவனத்துடனும், பாதுகாப்பு கருவிகளுடனும் பணியாற்றுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : journalist death ,Corona ,party ,leaders ,Deputy Chief Minister ,Tamil Nadu , Corona's first journalist death in Tamil Nadu; Deputy Chief Minister and various political party leaders
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...