×

இறக்குமதியான சீன பொருட்கள் மீதான 100% சோதனையை ஓரளவு தளர்த்த முடிவு!: மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் ஆலோசனை!

டெல்லி: சீன பொருட்கள் மீதான 100 சதவீத சோதனையை ஓரளவு தளர்த்த மத்திய அரசு முன்வந்துள்ளது. நிதித்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தேங்கியுள்ள சீன பொருட்கள் விடுவிப்பதால் நிலவியல் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான கெடுபிடி சீனாவில் அதிகரித்திருக்கிறது. லடாக்கில் எழுந்துள்ள எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விஷயத்திலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இந்தியாவில் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் 100 சதவீத அளவிற்கு சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சீனாவில் இருந்து டெலிகாம் மற்றும் மருத்துவ கருவிகள் இறக்குமதியில் சென்னை துறைமுகம் தான் நாட்டிலேயே பிரதான இடத்தில் இருக்கிறது.

எனவே சென்னை துறைமுகத்தில் தான் இந்த கெடுபிடியான சோதனை என்பது தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக சீனாவில் இருந்து சரக்கு கப்பல் மூலம் சென்னை வந்தடைந்த பொருட்களை எடுப்பதில் சிரமம் ஏற்படுவதாக கஸ்டம்ஸ் ஏஜென்டுகள் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து இறங்கிய சீன பொருட்களை எடுப்பதிலும் சிக்கல் நீடித்தது. இதேபோன்று ஹாங்காங்கில் இருந்து சரக்கு கப்பல் மூலம் வந்தடைந்த கன்டைனர்களை விடுவிப்பதிலும் சிக்கலுக்கு மேல் சிக்கல் நீடித்தது. எனவே இதன் காரணமாக நாட்டில் உள்ள துறைமுகங்களில் பலகோடி ரூபாய் அளவுக்கு சீன சரக்குகள் தேங்கி கிடந்தன. இது தொடர்பாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் சார்பில் பிரதமருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரிகளின் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் சீன பொருட்கள் மீதான கெடுபிடியை ஓரளவு தளர்த்தப்பட இருப்பதாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிகிறது. அதிலும், குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் அளித்த உத்திரவாதத்தின் பேரில் பகுதி அளவு கெடுபிடியை தளர்த்தி பொருட்களை ஒப்படைக்கலாம் என கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் மட்டுமல்ல நாட்டில் உள்ள பல துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தேங்கி கிடந்த சீன பொருட்களை விடுவிப்பதில் தற்போது ஓரளவு சிக்கல் நீங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த சில தினங்களில் இந்த பொருட்கள் அதிகளவில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் புலனாய்வுப் பிரிவினர் அளிக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு உரிய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதனை சோதிக்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவும் சுங்க அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

Tags : Chinese , 100% test , imported Chinese products , somewhat eased!
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...