×

குடிநீர் பிரச்னையை தீர்க்க கட்டப்பட்டு புதர்மண்டி கிடக்கும் நீருந்து நிலையங்கள்: பராமரித்து சீரமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்க்க, திருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகளில் புதர்மண்டி கிடக்கும் நீருந்து நிலையங்களை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பராமரித்து சீரமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்துகொண்டிருந்த கிருஷ்ணா நீர், முற்றிலும் நிறுத்தப்பட்டதால், சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில், முழு கொள்ளளவான, 3231 மில்லியன் கன அடியில், 280 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் 300 கன அடி தண்ணீர் லிங்க் கால்வாய் மூலம் புழல் நீரேற்று நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பூண்டியை சுற்றியுள்ள புல்லரம்பாக்கம், கைவண்டுர், காரணை, சிறுவானூர், வெள்ளியூர் உட்பட பல்வேறு கிராமங்களில் நீருந்து நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், அருகில் உள்ள விவசாய பம்ப் ஷெட்களில் இருந்து, ஒப்பந்த அடிப்படையில் ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நீர் உந்து நிலையத்தில் பெரிய தொட்டியில் சேகரித்து, அங்கிருந்து குழாய்களின் மூலம் புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் அனுப்புவது வழக்கம். இதற்கிடையில், இந்த நீருந்து நிலையங்கள் தற்போது பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது. எனவே, சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில், நீருந்து நிலையங்களை பராமரித்து, சீரமைத்து தயார் நிலையில் வைக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.Tags : pumping stations , Built ,drinking water, Permanent pumping stations, Request ,renovation
× RELATED 2 ஆண்டுகளான நிலையில் பழைய பத்திரங்களை...