×

சுகாதாரத்துறை நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மூன்றடுக்கு மாஸ்க் வாங்கிய மாநகராட்சி

* 14 லட்சம் வாங்கியதில் 31.50 லட்சம் இழப்பு: அரசாணைகளால் அம்பலம்

சென்னை: சுகாதாரத்துறை நிர்ணயம் செய்த விலையை விட சென்னை மாநகராட்சி கூடுதல் விலைக்கு மூன்றடுக்கு முகக்கவசங்களை வாங்கியுள்ளதும், இதனால் மாநகராட்சிக்கு 31.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ேநற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 70 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்தில் 911 பேரும், சென்னையில் மட்டும் 694 பேரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று வராமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என்95 முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் இதை தவிர்த்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் உட்பட அனைவரும் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் உள்ளாட்சி துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில் முகக் கவசம், கையுறை, முழு பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முகக் கவசம் வழங்கப்பட்டுவருகிறது. தற்போது வரை சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு 46 லட்சத்து 25 ஆயிரத்து 496 முகக் கவசங்கள், 3 லட்சத்து 9 ஆயிரத்து 105 கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர்த்து 5 லட்சம் முகக்கவசங்கள் மற்றும் 3.7 லட்சம் கையுறைகள் சென்னை மாநகராட்சியின் கையிருப்பில் உள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடக்க காலமான மார்ச் மாதம் சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்களுக்கு வழங்க 14 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள் தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்முதல் செய்ய மார்ச் 28ம் தேதி சென்னை மாநகராட்சியின் மன்ற தீர்மானத்திற்கு சிறப்பு அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி ஒரு முகக்கவசத்தின் விலை 9.25 என்ற விலையில் 14 லட்சம் முகக் கவசங்களை 1.29 கோடிக்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜிஎஸ்டி 6.47 லட்சம் உட்பட மொத்தம் 1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த விலையை விட குறைவான விலைக்கு சுகாதாரத்துறை சார்பில் மூன்றடுக்கு முகக்கவசங்கள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதன்படி, மார்ச் 24ம் தேதி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் (எண்: 391) மூன்றடுக்கு முகக்கவசத்தின் உத்தேச விலை 7 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலையின் படி 5 லட்சம் முகக்கவசங்களை வாங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் சுகாதாரத்துறை நிர்ணயம் செய்த விலையை விட நான்கே நாட்கள் இடைவெளியில் 2.25 கூடுதல் விலைக்கு ஒரு மூன்றடுக்கு முகக்கவசத்தை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி, 14 லட்சம் முகக்கவசங்களை வாங்கியதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு 31 .50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கமிஷனர் சொல்வது உண்மையா?

மாஸ்க் வாங்கியது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: இந்த மூன்றடுக்கு முகக்கவசங்களை கொள்முதல் செய்வதற்கான கேட்பு அறிக்கை பிப்ரவரி மாதம் 14ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தேதிக்கும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள மார்ச் 24ம் தேதிக்கும் இடையில் மூன்றடுக்கு முகக் கவசத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் இருந்தது. மத்திய அரசு மார்ச் 21ம் தேதி வெளியிட்ட  அரசிதழில் ஒரு மூன்றடுக்கு முகக்கவசத்தின் விலை பத்து ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் இருபதாம் தேதிக்கு பிறகு கூட தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் விலையும் பத்து ரூபாயை ஒட்டியே இருந்தது.  இவ்வாறு அவர் கூறினார்.

பிப்ரவரி 14ம் தேதியே அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கமிஷனர் கூறுகிறார். அந்த மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மார்ச் மாதம்தான் பாதிப்பு ஏற்பட்டது. 23ம் தேதி நள்ளிரவு அதாவது 24ம் தேதி முதல்தான் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போதுதான் தமிழகத்தில் கொரோனா தாக்குதலை தீவிரமாக ஆரம்பித்தது. முன்கூட்டியே அவர்கள் எப்படி மாஸ்க் வாங்குவது குறித்து திட்டமிட்டார்கள். இது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், சென்னை மாநகராட்சி வாங்குவதாக தீர்மானம் போடுவதற்கு 4 நாட்கள் முன்னதாக சுகாதாரத்துறை மட்டும் குறைந்த விலையில் எப்படி மாஸ்க் வாங்குவதற்கான அரசாணையை பிறப்பித்தது. அந்த அரசாணை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவில்லையா. தெரிந்தால், அவர்கள் வாங்கியவர்களிடமே வாங்கியிருக்கலாமே. சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்தது தெரிந்தும் வேண்டும் என்றே அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் விதமாக வீண் வம்புக்காக மாநகராட்சி வேறு இடத்தில் மாஸ்க் வாங்கினார்களா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

மேலும், தமிழ்நாடு மருத்துவ பணி கழகத்தின் விலையும் 10 ரூபாயை ஒட்டியே இருந்தது என்று தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் 7 ரூபாய் என குறிப்பிட்டு மாஸ்க் வாங்கியது. இதனால் ஒருமுறை மாஸ்க் வாங்கியதில் மட்டுமே இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஒவ்வொரு முறையும் மாஸ்க் வாங்கும்போதும், சுகாதாரத்துறை வாங்கிய விலையை விட பல மடங்கு அதிக விலை கொடுத்துதான் வாங்கியதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு முறை வாங்கும்போதும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்ற விவரத்தை மாநகராட்சியின் நேர்மையான அதிகாரிகள் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் முறைகேடு?

தரமற்ற தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அதில், ஒவ்வொரு கம்பெனியும் எவ்வளவு பணத்திற்கு விற்பனை செய்கிறார்கள் என்று குறிப்பிடும்போது 1500 முதல், 4000 வரை விற்பனை செய்வதாக குறிப்பிட்டிருந்தது. மாநகராட்சி வாங்கிய தெர்மல் ஸ்கேனரில் எம்ஆர்பி ரேட் 9,175 என்று குறிப்பிட்டுள்ளதும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சென்னை மாநகராட்சி சார்பில் 1765 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டியில் வாங்கியதாக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். அதாவது 317.70 ஜிஎஸ்டியுடன் சேர்த்து 2082.70க்கு வாங்கியுள்ளனர். ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் ஸ்னாப்டீல் என்ற மத்திய அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனம் தரமான தெர்மல் ஸ்கேனரை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 1545, 1612க்கு விற்பனை செய்கிறது. மாநகராட்சியோ தரமற்ற தெர்மல் ஸ்கேனரை 2082 விலை கொடுத்து வாங்கியுள்ளது ஜெயக்குமார் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : Corporation ,health department , Healthcare, Determination, Overpricing, Three-Dimensional Mask, Corporation
× RELATED இணைய வழியில் 550 பேர் விண்ணப்பம்...