×

கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ், தூய்மை பணியாளர்களுக்கு ஷீல்டு முகக்கவசம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், உள்ளாட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஷீல்டு முகக்கவசம் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மக்கள் கண்காணிப்பக நிர்வாக டிரஸ்டி சத்தியமூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான, கவச உடை, முகக்கவசம், கையுறை, ரப்பர் பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும், முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுலிப் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். ஐகோர்ட் கிளையின் எல்லைக்கு உட்பட்ட மாநகராட்சி கமிஷனர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூய்மை பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘54,235 போலீசாருக்கு ஷீல்டு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘கொரோனா முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து போலீசாருக்கும் ஷீல்டு முகக்கவசம், கையுறை, மாஸ்க் உள்ளிட்டவை வழங்க வேண்டும். அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதை அனைத்து போலீஸ் கமிஷனர்களும், எஸ்பிக்களும் உறுதிபடுத்த வேண்டும்.  தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் ஷீல்டு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு, பயன்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.


Tags : cleanup workers ,Icort Branch ,Corona ,branch , Corona, police, shield mask, icord branch, warrant
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...