×

சிறையில் தந்தை, மகன் இறந்த விவகாரம்: போலீசார் அத்துமீறி தாக்குவதும் கொரோனாவை போன்ற சமூகத்தொற்றுதான்: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

மதுரை:  சிறையில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் போலீசாரின் அத்துமீறலும் கொரோனா போன்ற சமூகத் தொற்றுதான் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகள் 2 பேர் மரணம் தொடர்பாக ஐகோர்ட் கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, தாமாக முன்வந்து பொதுநல வழக்காகவும் விசாரித்தது. இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி எஸ்பி வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராகி, தற்போதைய நிலை குறித்த அறிக்கையை இ-மெயிலில் தாக்கல் செய்தார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் ஆனந்தராஜ் ஆஜராகி, ‘‘பிரேத பரிசோதனை அறிக்கை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுபோன்ற காலக்கட்டத்தில் போலீசார் அத்துமீறி தாக்குவதும் ஒருவகையான கொரோனா சமூக தொற்றைப் போன்றதே. எனவே, போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உளவியல்ரீதியான கவுன்சலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்பட்டி கிளைச்சிறையிலுள்ள மற்றொரு விசாரணை கைதி ராஜாசிங் தாக்கப்பட்டது குறித்து, தூத்துக்குடி மாவட்ட நீதிபதி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இருவர் இறந்த வழக்கை இந்த நீதிமன்றம் கவனமாக கண்காணிக்கிறது. மாஜிஸ்திரேட் விசாரணையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்கும். கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டிற்கு சாத்தான்குளத்தில் முகாம் அலுவலகம் அமைக்க வேண்டும். அங்கிருந்து அவர் தொடர் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

இருவரின் குடும்பத்தினரிடம் அவர் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த விசாரணைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த விசாரணைக்கு இடையூறு ஏற்படக்கூடாது. சுதந்திரமான விசாரணை நடக்கும். இருவரது வீடு, காவல் நிலையம், சிறைச்சாலை ஆகியவற்றில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை மாஜிஸ்திரேட் ஆவணப்படுத்த வேண்டும். தேவையான புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கு டைரி உள்ளிட்டவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும். மாஜிஸ்திரேட் விசாரணையை மாவட்ட நீதிபதி கண்காணித்து, அவர் தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 30க்கு தள்ளி வைத்தனர்.
இதற்கிடையே காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தினரை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிவாரண தொகை ரூ.20 லட்சத்தை வழங்கினார்.

Tags : Death ,prison ,community ,Corona ,Icort ,judges ,jail ,Icourt , Father, son, deceased affair, iCord judges, opinion
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு