×

சென்னையில் வீடுவீடாக பரிசோதனை தீவிரம்: அறிகுறி இருப்பவர்கள் ஓடி ஒளியும் அவலம் * விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தப்பலாம் * மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கோயம்பேடு பாதிப்பிற்கு பிறகு கொரோனா வைரஸ் சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என சென்னையை காலி செய்துவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு தப்பி செல்கின்றனர். ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தெருவுக்கு கூட தேவையில்லாமல் வருபவர்களை போலீசார் தடுத்து வருகின்றனர். இதுதவிர வீடு வீடாக சென்று காய்ச்சல் அல்லது கொரோனா அறிகுறிகள் உள்ளதா என தகவல் சேகரித்து வந்தனர். அதன் மூலம் பெரிய அளவில் பலன் தரவில்லை. வீடுகளுக்குள் இருப்பவர்களுக்கு பாதிப்பு இருந்தால் கூட அதை யாரும் சொல்ல முன்வருவதில்லை.

அவர்களிடம் தகவல் தெரிவித்தால் கொரோனா பரிசோதனைக்கு அழைத்து சென்று விடுவார்களோ என்றும், தங்களது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்திலும் தங்களுக்கான அறிகுறிகளை மறைத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், தற்போது குடும்பத்தினர் தகவல்களோடு வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் போன்ற களப்பணியாளர்களுக்கு குறிப்பிட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டு தினமும் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பரிசோதனையில் வெப்பநிலை அதிகமாக உள்ளவர்கள் உடனடியாக பிசிஆர் சோதனை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும், மற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், வீடுகளில் இருப்பவர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்ய முடியாமல் களப்பணியாளர்கள் தினமும் திணறி வருகின்றனர். வீடுகளில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் அதை மறைக்கவே முயற்சி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. சாதாரணமாக இருப்பவர்கள் மட்டும் இந்த வெப்பநிலை பரிசோதனைக்கு முன்வருகின்றனர். அறிகுறி உள்ளவர்கள் வீடுகளுக்குள் மறைந்து கொள்வதும், வெளியில் சென்று விடுவதுமாக இருப்பதாக களப்பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தினால் தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கொரோனா பரவலையும் சென்னையில் குறைக்க முடியும். இல்லாத பட்சத்தில் மிகப் பெரிய பாதிப்பை சென்னை மக்கள் சந்திக்க வேண்டிய அவலத்துக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே உரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது அரசு எடுத்து வரும் முயற்சிகளை மக்கள் பயன்படுத்தினால்தான் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். வீடு வீடாக சென்று வெப்பநிலை பரிசோதனை செய்வது ஒரு நல்ல திட்டம்.

களப்பணியாளர்களை கண்டு அச்சம் கொள்ளாமல் நமது உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் அறிகுறிகள் எதுவும் இருந்தால் கொரோனா டெஸ்ட் எடுத்து பாசிட்டிவாக வந்தால் உரிய சிகிச்சை மேற்கொண்டு தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் நோய் முற்றிய பிறகு மருத்துவமனை சென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். இப்படி ஏற்படும் உயிரிழப்புகள் தான் சென்னையில் மிக அதிகமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் இதுபற்றி உரிய விழிப்புணர்வை சுகாதாரத் துறை ஏற்படுத்த வேண்டும். நோய்பற்றி மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கி அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க செய்ய சுகாதாரத்துறை தான் முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் இதுபோன்ற பரிசோதனைகளை செய்ய முன்வருவார்கள்’’ என்றார்.

Tags : Chennai , Madras, experiment, symptom, distress
× RELATED சென்னையில் கூடுதலாக கொரோனா பரிசோதனை நடத்த முடிவு.: சென்னை மாநகராட்சி