×

கொரோனா பீதியால் யாரும் வரல நடைபாதையில் பல மணிநேரம் கிடந்த பெண்ணின் சடலம்: மகளிர் இன்ஸ்பெக்டர் அடக்கம் செய்தார்

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி எஸ்விஎம் பி-பிளாக் பகுதி பிளாட்பாரத்தில் நேற்று ஒரு பெண் இறந்து கிடந்தார். அவர் அருகே 2 பெண்கள் அழுது கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள், தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்த பெண்ணின் பெயர் பிரபாவதி (57) என்பதும், அதே பகுதியில் குப்பை சேகரித்து அதை தரம் பிரித்து விற்கும் தொழில் செய்து வந்ததும் தெரிந்தது.

அருகில் அழுது கொண்டிருந்தவர்கள் அவரின் சகோதரிகள் என்றும் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரபாவதி, நேற்று முன்தினம் இரவு பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது, தூக்கத்திலேயே இறந்ததும் தெரிந்தது. சென்னையில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் யாரும் அருகே சென்று எந்த உதவியும் செய்யாமல் தயங்கி ஓரமாக நின்று கொண்டிருந்தனர். இதனால் சடலத்தை  அடக்கம் செய்ய முடியாமல்  அவரின் சகோதரிகள் பல மணி நேரமாக  கதறி அழுது கொண்டிருந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தனது சொந்த செலவில் நேற்று இறுதி சடங்குகள் மேற்கொண்டு, ஓட்டேரி சுடுகாட்டில் சடலத்தை நல்லடக்கம் செய்தார்.

Tags : inspector ,women ,sidewalk ,Corona , Corona, panic, woman, corpse, inspector of women, buried
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு