முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட ஏற்றுமதி நிறுவனத்திற்கு சீல்: தாசில்தார் நடவடிக்கை

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மலில் கொரோனா பரவும் வகையில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை தாசில்தார் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். பல்லாவரம் அடுத்த பம்மல் பஜனை கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை பின்பற்றாமல் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், முககவசம் அணியாமலும், போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமலும், எளிதில் தொற்று பரவும் வகையில் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் பல்லாவரம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர், அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். பின்னர், அந்த நிறுவனத்தை இழுத்து பூட்டி சீல் வைத்துச் சென்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன், இதே போன்று அனகாபுத்தூரில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் நகராட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>