×

தொற்று ஏற்பட்ட நபருடன் ஒருவர் குறைந்தபட்சம்: 15 நிமிடம் செலவழித்தாலே அவரை சோதிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை நேற்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  கோவிட்-19 சம்பந்தமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், களப்பணிகள், நோயாளிகளை கையாளுவது குறித்த நிறைய பணிகள் தொடர்ந்து நடக்கிறது. சென்னையில் குடிசைப்பகுதிகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள் என ஏறக்குறைய 26லிருந்து 28 லட்சம் மக்கள் வரை வசிக்கிறார்கள். இவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சமூக கவனிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

1,979 இடங்களில் வசிக்கக்கூடிய பின்தங்கிய பகுதிகள், குடிசைப்பகுதிகளில் 92 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அங்கு நோய் தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் கொரோனா  குறித்த விழிப்புணர்வு, முகக்கவசம் அணிவது, சமூக விலகல், கைகழுவுவது, வயதானவர்களை, நீண்ட நாட்களாக நோயுடன் வசிக்கும் மக்களை கவனத்துடன் கையாளுவது, சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தால் உடனடியாக சோதனைக்கு அணுகுவது போன்றவற்றை அவர்களுக்கு எடுத்து சொல்லி அதன் மூலம் நோய்த்தொற்றை தடுப்பதே இந்த சமூக கவனிப்பு திட்டத்தின் நோக்கம். கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளில் ஒரு லட்சம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், நல்ல முடிவு கிடைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கோவிட் பாதுகாப்பு மையத்தில் 1,500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் இது தயாராகிவிடும். ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் என்னவென்றால் ஒரு நபருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், அவரது குடும்ப உறுப்பினரை சோதிக்க வேண்டும். தொற்று ஏற்பட்ட நபருடன் ஒருவர் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் செலவழிக்கிறார், பழகுகிறார் என்றால் அவரை கண்டிப்பாக சோதிக்க வேண்டும். அதன்படி சென்னையில் தினசரி 10 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது. சோதனை எடுத்த உடன் தனிமைப்படுத்தி விடுகிறோம். ஒரு நபருக்கு சோதனை நடத்திய பின்னர் அவருக்கு தொற்று வரலாம். ஆகவே 14 நாள் தனிமைப்படுத்தி வருகிறோம். வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் கண்காணிக்கும் வகையில் அவர்களிடம் 11,500 படுக்கைகள் ஒப்படைக்கப்பட்டன. இதில் 4,500 பேர் தான் சிகிச்சையில் இருக்கின்றனர்.ஊரடங்கில் மக்கள் கட்டுக்கோப்பாக இருப்பதை வலியுறுத்துவதற்காக  காவல்துறை சார்பில் கமாண்டோ அணிவகுப்பு நடந்தது.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கூறினார். சிறுநீரக சுத்திகரிப்பு மையம் திறப்பு: வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

பரிசோதனை அதிகரிப்பு
ஒரு வாரத்திற்கு முன்பு மாநகராட்சி சார்பில் 5,500 பரிசோதனைகள் செய்தோம். தற்போது 10 ஆயிரம் சோதனை செய்யப்படுகிறது. முன்னர் ஒரு நபருக்கு தொற்று வந்தால் ஒரு தெருவையே தனிமைப்படுத்துவோம். தற்போது, சம்மந்தப்பட்ட வீடுகளை மட்டுமே தனிமைப்படுத்தி கண்காணிக்கிறோம். தற்போது 54 மையங்களில் 17,500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தேவையான படுக்கைகளை தயார் செய்து வைத்துக்கொள்கிறோம்.

தினசரி 3,500 பேருக்கு அறிகுறி
சென்னையில் தற்போது 3,500 பேர் வரை தினசரி அறிகுறி  உள்ளவர்களை கண்டறியப்படுகிறது. இந்த முழு ஊரடங்கு காரணமாக 90 சதவீத மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒருவேளை அதிக அளவான மக்கள் நோய்த்தொற்றுடன் இருந்தாலும் இதன் மூலம் பரவல் தடுக்கப்படுகிறது. தொற்றுள்ளவர்கள் வெளியே வராமல் அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் அவர்களுக்குள்ளேயே அது சரியாகும். மேலும் அவர்கள் மூலம் குடும்பத்தினருக்கு பரவினாலும் தற்போது நாங்கள் செய்யும் இந்த சோதனை மூலம் அவர்களை கண்டறியப்படும்.


Tags : Prakash , Interview with Prakash, Coroner, Municipal Commissioner for Coronation
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்