சூப்பர் ஓவர் இருப்பதே தெரியாது...

வெலிங்டன்: இங்கிலாந்துடன் மோதிய உலககோப்பை பைனலில்,  போட்டி முடியும் வரை சூப்பர் ஓவர் இருப்பதே எங்களுக்கு தெரியாது என்று நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்தார். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த ஐசிசி ஒருநாள் உலககோப்பை  போட்டியின் பைனலில்  இங்கிலாந்து- நியூசிலாந்து  அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி சமனில் முடிந்ததை அடுத்து, புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. அதுவும் சரிசமனில் முடிந்த நிலையில், இறுதிப் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணி முதல்முறையாக உலக கோப்பையை கைபற்றியது.

ஐசிசியின் இந்த விதிகள் நியூசிலாந்து அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. உலக கோப்பை போட்டி முடிந்து ஏறக்குறைய ஓராண்டு ஆக உள்ள நிலையில்  சூப்பர் ஓவர் சம்பவத்தை உலகம் மறந்திருந்தாலும் நியூசிலாந்து வீரர்கள் மறக்கவேயில்லை. அந்த அணியின் மூத்த வீரரான ராஸ் டெய்லர் இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘ஒருநாள் போட்டியை  ஒரு சூப்பர் ஓவரில் முடிப்பது சரியல்ல. போட்டி சமனில் முடிவதில் ஒரு பிரச்னையும் இல்லை.

கால்பந்து போன்ற சில போட்டிகளில் குறைந்த நேரத்தில் வெற்றிக்கான முடிவுகள் எட்டும் நடவடிக்கைகள் உள்ளன. ஆனால் ஒருநாள் போட்டிக்கு சூப்பர் ஓவர் அவசியமில்லை. சமனில் போட்டியை முடிக்கும் 2 அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கலாம். போட்டியின் முடிவில் , ‘இது ஒரு அருமையான போட்டி’ என்று நடுவர்களிடம் கூறினேன். போட்டி அத்துடன் முடிந்து விட்டது என்றும் நினைத்தேன். சூப்பர் ஓவர் இருப்பது  எனக்கு தெரியாது‘ என்றார்.

Related Stories:

More