×

பிரிமியர் லீக் கால்பந்து முதல் முறையாக லிவர்பூல் சாம்பியன்

லண்டன்: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் லிவர்பூல் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் இந்த பிரபலமான தொடரில் மொத்தம் 20 அணிகள் லீக் ஆட்டங்களில் விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற 19 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டிய நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடைசி கட்ட ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸ் தொற்று அபாயம் சற்று தணிந்த பின்னர் போட்டிகள் மீண்டும் தொடங்கி நடந்தன. புள்ளிப் பட்டியலில் லிவர்பூல் அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த மான்செஸ்டர் சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் செல்சியா அணியிடம் தோல்வியைத் தழுவியதை அடுத்து, லீவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது உறுதியானது.

அனைத்து அணிகளும் தலா 31 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் லிவர்பூல் அணி 86 புள்ளிகளுடன் (28 வெற்றி, 2 டிரா, 1 தோல்வி) முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது. மான்செஸ்டர் சிட்டி (63 புள்ளி), லெய்ஸ்டர் சிட்டி (55), செல்சியா (54) அடுத்த இடங்களில் உள்ளன. எஞ்சியுள்ள 7 ஆட்டங்களில் மான்செஸ்டர் அணி தொடர்ச்சியாக வென்றாலும், லிவர்பூல் அணியை முந்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 1992ல் இந்த தொடர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக சாம்பியனான மகிழ்ச்சியை லிவர்பூல் அணி வீரர்களும், ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜர்கன் கிளாப் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.


Tags : Liverpool ,time ,Premier League ,champion , Premier League football, Liverpool champion
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...