×

இது கறுப்பு இல்லை; நல்ல பணம் சுவிஸ் வங்கிகளில் முதலீடு 77வது இடத்தில் இந்தியா

ஜூரிச்: சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பண மதிப்பை அடிப்படையாக கொண்ட தரவரிசை பட்டியலில் இந்தியா 3 இடங்கள் பின்தங்கி 77வது இடத்துக்கு இறங்கியுள்ளது. இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் வெளிநாட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக டெபாசிட் செய்துள்ள பணத்தின் மொத்த மதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி ஆண்டுதோறும் வெளியிடும். அதன்படி, 2019ம் ஆண்டுக்கான விபரத்தை நேற்று அது வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 77வது இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டில் 74ம் இடத்தில் இருந்தது. மேலும், இந்தியாவில் உள்ள கிளைகள் உட்பட சுவிஸ் வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ள இந்தியர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை 2019ல் 5.8 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 6,625 கோடியாக சரிந்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் மொத்த வெளிநாட்டு பணத்தில் இந்தியர்கள் வைத்துள்ள தொகை வெறும் 0.06% சதவீதம் மட்டுமே என சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இதில், இங்கிலாந்து 27 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பிரான்ஸ், ஹாங்காங் ஆகியவை டாப் 5 இடத்தில் உள்ளன. இந்த 5 நாடுகளே மொத்த வெளிநாட்டு டெபாசிட் தொகையில் 50 சதவீதத்தை கொண்டுள்ளன. டாப்-15 நாடுகள் மொத்த வெளிநாட்டு டெபாசிட் தொகையில் 75 சதவீதத்தையும், டாப்-30 நாடுகள் 90 சதவீதத்தையும் கொண்டுள்ளன. டாப்-10 நாடுகளில் சிங்கப்பூர், பஹாமாஸ், ஜெர்மனி, லக்சம்பர்க், கேமேன் தீவுகள் அடங்கும். ரஷ்யா 20வது இடத்திலும், சீனா 22வது இடத்திலும் உள்ளன. கென்யா (74), மொரீஷியஸ் (68) போன்ற நாடுகள் கூட இந்தியாவை விட தரவரிசையில் முந்தி உள்ளன. பாகிஸ்தான் 99வது இடத்தில் உள்ளது.

சுவிஸ் என்றாலே கறுப்பு தானா? சுவிஸ் வங்கி என்றாலே ‘சட்’டென நினைவுக்கு வருவது  கறுப்புபணம் தான். ஆனால், இங்கு காட்டப்பட்டுள்ள கணக்குகள் கறுப்பு பணம் சம்பந்தப்பட்டது அல்ல. இது சுவிஸ் வங்கிகளில் அதிகாரப்பூர்வமாக கணக்கு வைத்துள்ளவர்கள் குறித்த விவரம். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், மற்றும் பிற இந்திய வெளிநாட்டு நிறுவனங்கள் பெயர்களில் வைத்திருக்கும் கணக்குகளும் தொகைகளும் கூட இந்தப் புள்ளி விவரத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* சுவிஸ் வங்கிகளில் உள்ள மொத்த வெளிநாட்டு பணத்தில் இந்தியர்கள் வைத்துள்ள தொகை வெறும் 0.06% சதவீதம் மட்டுமே.

* சுவிஸ் வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 2019ல் 5.8 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 6,625 கோடியாக சரிந்துள்ளது.

* இங்கிலாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய டாப்- 5 மட்டுமே, இந்த வங்கியின் மொத்த பணத்தில் 50 சதவீதத்தை கொண்டுள்ளன.

Tags : India ,Swiss ,banks , Swiss Bank, Investment, 77th Place, India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...