×

இந்தியா, நட்பு நாடுகளுக்கு அதிநவீன போர் விமான பயிற்சி்: சீனாவின் சீண்டலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா அதிரடி: குவாம் தீவில் தனி தளம் அமைக்க நடவடிக்கை

வாஷிங்டன்: அண்டை நாடுகளுக்கு போர் பீதியை ஏற்படுத்தி வரும் சீனாவின் சீண்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா அதிநவீன போர் விமான பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. உலகளவில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த, போர் பதற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லையில் ராணுவத்தை அனுப்பி, பதற்றத்தை உருவாக்கி வருகிறது. மேலும், தென் சீன கடலையும் ஆக்கிரமிக்க நீண்ட காலமாக முயன்று வருகிறது. சீனாவின் இந்த செயல், அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது முதல் அமெரிக்காவின் கோபம் அதிகமாகி, சீனாவுக்கு கடிவாளம் போடும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதன் ஒரு கட்டமாக, சீனாவால் அச்சுறுத்தலை சந்தித்து வரும் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற தனது நட்பு நாடுகளுக்கு ராணுவ ரீதியான உதவிகளை அளித்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயார்படுத்த திட்டங்களை வகுத்துள்ளது. இதற்காக, தனது கட்டுப்பாட்டில் உள்ள பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குவாம் தீவில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிநவீன போர் விமான பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்த தீவில் தனியாக போர் விமான பயிற்சி தளம் அமைக்கவும் பரிசீலிக்கிறது.

அமெரிக்காவின் செனட் சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட, ‘தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் - 2021’ல், இதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கு போர் விமான பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தங்களை செய்ய வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, சிங்கப்பூருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் இதற்கான ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே, அலாஸ்கா, ஐரோப்பா உட்பட 9 இடங்களில் அமெரிக்கா தனது போர் விமான பயிற்சி தளங்களை அமைக்க தேர்வு செய்துள்ளது.

‘எங்களிடம் பலம் உள்ளது’
பிரஸ்லெஸ் அமைப்பின் சர்வதேச மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக  அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று பங்கேற்றார். அதில் பேசிய அவர், ‘‘சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவை எதிர்ப்பதற்கான மனநிலையில் தான் நாங்கள் இப்போது இருக்கிறோம். இது, எங்கள் நேரத்துக்கான சவால். அதனை செய்வதற்கான பலம் எங்களிடம் உள்ளது. இந்தியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, தென் சீன கடல் பகுதிகளையும் சீனா அச்சுறுத்தி வருகிறது. சுதந்திரத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே எந்த சமரசமும் இருக்க முடியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சியால் நமது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை. சுதந்திரமான நமது சமுதாயம், வளம், நமது எதிர்காலம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு, சீனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆனால், இது எவ்வளவு எளிதாக இருக்காது,’’ என்றார்.

Tags : India ,Allied ,China ,US ,Syndicate India , India, Aviation, China, USA, Action
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்