×

சீல்களை பிரித்து மீன்களை அனுப்பிய விவகாரம்; பார்சல் பதிவு செய்யும் கிளார்க் 2 பேர் சஸ்பெண்ட்: முறைகேடு தொடர்வதாக அதிகாரிகள் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல நிறுவனங்களின் சார்பில் பார்சல்கள் பதிவு செய்யப்பட்டு அவை அனைத்தும் சீல் வைக்கப்பட்டு ரயிலில் ஏற்றப்பட்டது. அதில், இரண்டு வார இதழ்களின் பார்சல்களும் அடங்கும். இந்நிலையில் சென்னையில் இருந்து அனுப்பிய வார இதழ்களின் பார்சல்கள் ஈரோடு, கோயம்புத்தூருக்கு சென்று சேரவில்லை. இதுகுறித்து வார இதழ் நிறுவனம் சார்பில் தெற்கு ரயில்வேயில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் பார்சல்கள் அனுப்பும் இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் ரயில்வே நடைபாதைகளில் எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பல பார்சல்கள் பிரிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டு இருந்தன. இதுகுறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அங்கீகரிப்படாத பார்சல் நிறுவனம் ஒன்று, பார்சல்களின் சீல்களை பிரித்து அதில் இருந்த பொருட்களை எடுத்து கீழே வீசிவிட்டு, மீன்களை ஏற்றி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பார்சல் ஏஜென்ட் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே சார்பில் உடந்தையாக இருந்த பார்சல் பதிவு செய்யும் கிளார்க் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இதுபற்றி ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் அங்கீகாரம் இல்லாத பார்சல் நிறுவனம் ஒன்று முறைகேடாக சீல் பிரித்துள்ளது. அவர்களுக்கு எப்படி பதிவு செய்யும் பாஸ்வர்ட், யூசர் பெயர் கிடைத்தது என்று தெரியவில்லை. எனவே இச்சம்பவத்தில் உயர் அதிகாரிகள் யாருக்கும் தொடர்பு உள்ளதா, இதுபோன்று எத்தனை நாட்கள் பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று விசாரணை நடத்தி வருகிறது’ என்றார்.


Tags : dispatch , Seal, fish, suspend, abuse
× RELATED பணி ஓய்வு பெற்ற பொதுமேலாளருக்கு எச்ஏஎல் தமிழ் மன்றம் வழியனுப்பு விழா