×

மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

மதுரை: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மதுரை, தேனியில் ஜூலை 15-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்களின் வாழ்வாதாரம் முற்றியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா அதிகம் பாதித்துள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டடங்களை தொடர்ந்து தற்போது மதுரையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையில் இன்று மேலும் புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை  1,454 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மாவட்டத்தில் 204 பேர் பாதிக்கப்பட்டதையடுத்த மொத்த எண்ணிக்கை 1,279 ஆக இருந்தது. அவர்களில் 448 பேர் குணமடைந்த நிலையில் 820 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், இன்று 175 பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 995 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளது .

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் முழு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 5 நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இம்மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய, ஜூன் 24 முதல் ஜூலை 14 வரையிலான மின் கட்டணத்தை ஜூலை 15ம் தேதி செலுத்தலாம். மேலும் குறைந்த தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Tags : Madurai ,Theni , Extension , 15 ,install ,power supply ,Madurai, Theni
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...