×

கொரோனா வைரஸால் ஏமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம்: யுனிசெஃப் தகவல்

ஏமன்: கொரோனா வைரஸால் ஏமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம் என்று சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் கூறும்போது, ஏமனில் 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த எண்ணிக்கை இந்த வருட இறுதியில் 20% அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா காலத்தில் நிதித் தட்டுப்பாடு நிலவுவதால் ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம். ஏமனில் உள்ள சுகாதார அமைப்புகள் கரோனா வைரஸைச் சமாளிக்கப் போராடி வரும் சூழலில் அங்கு குழந்தைகளின் நிலைமை மிக மோசமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் கொரோனா தொற்றால் இதுவரை 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 386 பேர் குணமடைந்துள்ளனர். 288 பேர் பலியாகியுள்ளனர். தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.



Tags : Millions ,children ,Yemen ,UNICEF ,Corona , Yemen, Corona
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்