×

கொரோனா தடுப்பு நிதிக்கு கிடைக்கும் நன்கொடை விவரங்களை மறைக்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

சென்னை : கொரோனா தடுப்பு நிதிக்கு கிடைக்கும் நன்கொடை விவரங்களை மறைக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. நன்கொடை விவரங்களை அவ்வப்போது வெளிப்படை தன்மையுடன் அரசு வெளியிட்டு வருகிறது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தகவல்களை இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என்றும், எவ்வளவு நன்கொடை வந்துள்ளது என்று வெளிப்படையாக கூறவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் இன்று தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கிடைக்கும் நன்கொடை விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அளிக்கப்படும் நிதியை முழுவதுமாக அரசு கணக்கிட்டு வருகிறது. இதனை இணையதளத்தில் பதிவிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

10 லட்சம் ரூபாய்க்கு மேலாக  நன்கொடை அளித்தவர்கள் முதல்வரின் சார்பில் பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்பட்டதாகவும், தற்போது பல்வேறு வழிமுறைகளில் காசோலை மட்டுமில்லாமல் வங்கியில் இருந்து நேரடி பண பரிமாற்றம், கூகுள் பிளே மூலமாக பலவகைகளில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதால் அனைத்தையும் தொகுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதலைச்சர் நிவாரண நிதிக்கு கிடைக்கும் பணத்தை மாநில பேரிடர் மேலாண்மைக்கு மாற்றம் செய்து அதன் மூலமாக பொதுசுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் மனு குறித்து மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிப்பதற்கும், வாதம் செய்வதற்கும் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கானது வருகின்ற திங்கட்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Corona Prevention Fund ,Tamil Nadu ,government ,High Court , Corona, Prevention Fund, High Court, Government of Tamil Nadu
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...