×

கனமழை காரணமாக கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தம்: அகழாய்வு குழிகளில் மண் சரிந்து மழைநீர் தேக்கம்!!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக கீழடியில் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கீழடி 6ம் கட்ட அகழாய்வானது தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பண்டைய மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பொதுமக்கள் பலரும் அகழாய்வினை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் கீழடியில் பெய்த மழை காரணமாக அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. திருபுவனம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் கீழடி, அகரம், மணலூர், கொந்தகம் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்விற்காக தோண்டப்பட்ட குழிகளில் மணல் சரிந்ததுடன் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 19ம் தேதியிலிருந்து நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழாய்வு பணிகளை பார்வையிட வந்த பொதுமக்கள் மழை காரணமாக தொன்மைகளை பார்வையிட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, குழிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் அகற்றப்பட்டவுடன் நாளை முதல் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் 40 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Heavy rain, underwater, excavation work
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை