×

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி!

புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனிடையே இந்த ஆண்டு தொடக்கம் முதல் பாதுகாப்புப் படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார், ராணுவத்தின் 42வது ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் இனைந்து டிராலின் சேவா உல்லர் பகுதியில் நேற்று மாலை தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று சந்தேகத்திற்கு இடமான பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது, மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும், அப்பகுதியில் இருந்து இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அப்பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்க கூடும் என நம்புவதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : militants ,Security forces ,district ,Pulwama , Pulwama, Avantipora, Terrorists, Encounter, Security Forces
× RELATED ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை