×

புதுவை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!: மீன்பிடி தடைகால நிவாரண தொகையை வழங்க கோரிக்கை!

புதுச்சேரி: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஆளுநர் கிரண்பேடி எதிராக இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி நடுக்கடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. இதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 1500 வழங்க வேண்டும். தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுவிட்டனர்.

 ஆனால் இன்னும் மீனவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கபடவில்லை. எனவே தங்களது மீன்பிடி தடைகால நிவாரணத்தை வழங்கக்கோரி மீனவர்கள் ஆளுநருக்கு பல்வேறு முறை கோரிக்கை வைத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் ஆளுநர் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனை கண்டித்து தான் தற்போது புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில், கிட்டத்தட்ட 5 நாட்டிகள் மைல் தொலைவில் புதுச்சேரி தலைமை செயலகத்துக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் புதுச்சேரியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மீனவர்கள் தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பாதுகாப்பு கருதி 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் போராட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.Tags : Fishermen ,Governor ,Kuwait Puduvai ,Sea ,Fishermen Go Down , Fishermen go down to sea in protest of Governor of Puduvai
× RELATED நீட் குழப்பம் கவர்னர் கேட்பாரா? கமல் கேள்வி