×

திருச்சியில் முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த அதிகாரிக்கு கொரோனா..!

திருச்சி: குடிமராமத்து பணி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி செல்லும் நிலையில், அவருடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதல்வர் நிகழ்ச்சிக்கு வருகை தருவதால், ஆட்சியர் அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனடிப்படையில், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் திருச்சி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் வனிதா ஆகியோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும், மருத்துவர்கள், சுகாதார துறை ஊழியர்கள், வருவாய்த்துறை, பொதுத்துறை, வேளாண்துறை மற்றும் ஆற்று பாதுகாப்பு கோட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, மறுநாள், செய்தியாளருக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், முதல்வர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

பரிசோதனையின்போது கொரோனா தொற்று இல்லை என்பவர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவதாகவும் மற்றவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் மாவட்ட அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்,  மயிலாடுதுறையில் உள்ள காவிரி வடிநீர் கோட்ட செயற்பொறியாளர் மற்றும் அவருடைய ஓட்டுநர் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதன் முடிவுகள் வெளியான நிலையில், செயற்பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், திருச்சியில் முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : ceremony ,Corona ,Trichy Trichy , Trichy, Chief Minister, Officer, Corona
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா