×

கொரோனாவுக்கு ஒரே நாளில் 3509 பேர் பாதிப்பு: மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை

சென்னை: தமிழகத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து, தமிழகத்தில் ெமாத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் நேற்று 1843 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரே வாரத்தில் 3 மடங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் வரும் 30ம் தேதி வரை 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனால் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்ட முறை ரத்து செய்யப்பட்டு அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வாங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ேநற்று புதிய உச்சமாக 3,509 பேருக்கு, அதாவது சென்னையில் மட்டும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் தவிர்த்து பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 3 மடங்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 30,307 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3509  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 45 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 3 மடங்காக உயர்ந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த 37 மாவட்டங்களின் எல்லைகளை நேற்று முதல் மூடி பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. மாவட்டங்களுக்கு இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாவட்டத்திற்கு மாவட்டம் இணைக்கும் சாலைகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து அதிரடி சோதனை நடத்தினர். மாவட்டத்திற்குள்ளே செல்லும் வாகனங்களை தவிர்த்து வெளி மாவட்டங்களில் இருந்து ஆவணங்கள் இன்றி வந்த அனைத்து வாகன ஓட்டிகள் மீதும் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கமாக மண்டல வாரியாக இயக்கப்பட்ட அரசு பேருந்து சேவையும் நேற்று நிறுத்தப்பட்டது.

மாவட்டத்திற்குள்ளேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. அவசர தேவைக்காக வெளி மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் உடன் வந்த வாகனங்களை மட்டும் மாவட்டத்திற்குள் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம், மருத்துவ குழுவினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை சோதனை செய்த பிறகே தங்கள் மாவட்டத்திற்குள் அனுமதித்தனர். இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனங்களை போலீசார் உரிய ஆவணங்களை சரிபார்த்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதித்தனர். இதனால் மாவட்ட எல்லைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பலருக்கு போலீசார் தகுந்த அறிவுரைகளை கூறி திருப்பி அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய கூலி வேலைக்கு பெண்கள் சென்ற வாகனத்தை போலீசார் மடக்கினர். பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதனால் அவர்கள் சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். அதேபோல, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டத்திலும் பொதுமக்கள் தடுக்கப்பட்டதால், போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சில இடங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் வந்த வாகன ஓட்டிகளிடம் நேற்று போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனால், இன்று முதல் எந்தவித நிபந்தனையும் இன்றி உரிய இ-பாஸ் இல்லாமல் வந்தால் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டங்களை இணைக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட டிஎஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ குழுவும் சோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரகசியமாக மாவட்டத்திற்குள் யாரேனும் ஊடுருவி இருந்தால் அவர்கள் குறித்து உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

இல்லை என்றால் அடைக்கலம் கொடுத்த நபர் உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று ஊர் மக்களுக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுவதால் மாவட்டங்களுக்கு இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடைக்கலம் கொடுத்தால் வழக்கு
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரகசியமாக மாவட்டத்திற்குள் யாரேனும் ஊடுருவி இருந்தால் அவர்கள் குறித்து உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அடைக்கலம் கொடுத்த நபர் உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

Tags : Coronation , 3509 people,affected ,Coronation overnight
× RELATED சென்னையில் கொரோனாவால் 4 பேர்...