×

தொற்று ஏற்படும்முன் நடவடிக்கை தேவை அதிகமாக தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வேன்கள்: டூ வீலர்களை மட்டும் பிடிக்கும் போலீசார்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல்,  அதிகளவு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வேன்களின் டிரைவர்களால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. டூ வீலர்களை மட்டும் பிடிக்கும் போலீசார் இதை கண்டும் காணாமல் உள்ளது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. திருவள்ளூர் காக்களூர் சிட்கோ, திருமழிசை சிட்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை, ஷிப்ட் முறையில் பணிக்கு அழைத்துச் சென்று, மீண்டும் கொண்டுவந்து விட, தொழிற்சாலை நிர்வாகம் தனியார் வேன்களை குத்தகை அடிப்படையில் பெறுகின்றனர். இதில், ஒரு வேனில் அதிகபட்சம் டிரைவர் உட்பட 13 பேர் வரை பயணிக்கலாம்.

ஆனால், ஒரு வேனில் குறைந்தது 30 பேர் வரை ஏற்றிச் செல்கின்றனர். இதில், பலர் படியில் உட்கார்ந்தபடியும், உள்ளே நின்றபடியும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். குறிப்பாக பெண் தொழிலாளர்களும் படியில் நின்றபடி உயிரை கையில் பிடித்து பயணிக்கும் அவலம் உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவலை ஒட்டி கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வேன் மற்றும் பஸ்களில் சமூக இடைவெளியுடன் தொழிலாளர்களை ஏற்றி செல்ல வேண்டும் என சில விதிமுறைகளுடன் இ-பாஸ் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் விதிகளை மீறி சமூக இடைவெளியின்றி தொழிற்சாலை வேன்களில் 25க்கும் மேற்பட்டோர் தினமும் திருவள்ளூர் வழியாக பயணிக்கின்றனர். இவர்களை வாகன சோதனையில் டூ வீலர்களை மடக்கி பிடிக்கும் போலீசார், அவ்வப்போது அதன் டிரைவர்கள் கொடுக்கும் மாமூலால் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, கொரோனா தொற்று பரவலை தடுக்க, திருவள்ளூர் வழியாக அதிகளவு ஆட்களை ஏற்றிச் செல்லும் தனியார் வேன்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  



Tags : Two-wheelers , Need , action ,infection occurs, workers,Two-wheeler-only cops
× RELATED வத்தலக்குண்டுவில் அச்சுறுத்தும் தெருநாய்கள்