×

தண்ணீரை வீணாக்கும் திருப்போரூர் பேரூராட்சி: உடைப்புகளை சரி செய்யாததால் அவலம்

திருப்போரூர்:  திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு சிறுதாவூர் கிராமத்தில் உள்ள 5 கிணறுகள் மூலமாகவும், கொண்டங்கி கிராமத்தில் உள்ள 5 கிணறுகள் மூலமாகவும், செம்பாக்கம் கிராமத்தில் 2 உள்ள கிணறுகள் மூலமாகவும் குழாய்கள் மூலம் குடிநீர் எடுத்து வரப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிககளில் சேகரித்து, 3 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. மேலும், திருவஞ்சாவடி தெரு, சான்றோர் வீதி, கிழக்கு மாடவீதி உள்பட சில இடங்களில் பேரூராட்சிக்கு சொந்தமான பொது கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் இருந்து தினமும் 1 முதல் 2 மணிநேரம் வரை தெரு வாரியாக தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீரை பொதுமக்கள் துணி துவைத்தல், பாத்திரங்கள் கழுவுதல் ஆகியவைக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் பல்வேறு தெருக்களில் நடக்கின்றன. இதற்காக ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கப்படுகின்றன.

இதனால், குடிநீர் குழாய்கள் உடைந்து பல இடங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. தற்போதைய கோடை காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பேரூராட்சி நிர்வாகம் தினமும் தண்ணீர் வழங்கும் நிலையில், இந்த குழாய் உடைப்புகளால் தண்ணீர் வீணாக தெருக்களில் ஓடுகிறது. இதனால் கோடை காலத்தில் தண்ணீர் வீணாக்கப்படுவது குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கவனக்குறைவான செயல்பாட்டால் பேரூராட்சி நிர்வாகம் தினமும் வழங்கும் தண்ணீர் வீணாக்கப் படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்குவதில் கடும் அக்கறை செலுத்தி உடைப்புகளை உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாக்கப்படுவதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



Tags : Water-washing
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...