×

கொரோனாவுக்கு மருத்துவர் பலி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 76 வயது மருத்துவர் ஒருவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 6ம் தேதி இதன் முடிவுகள் வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடலை உரிய வழிமுறைகளை பின்பற்றி மாநகராட்சி ஊழியர்கள் அடக்கம் செய்தனர். பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சியில் சுகாதார அலுவலர், இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஒரு களப்பணி உதவியாளர் ஆகியோர் நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2 நாட்களாக இவர்களுக்கு சளி மற்றும் இருமல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளதால், சக ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே பல்லாவரம் நகராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவியதால், மார்க்கெட்டை அதிகாரிகள் மூடினர். இதன்மூலம், நோய் தொற்று குறைந்தது. இந்நிலையில், கோயம்பேடு பகுதியில் நேற்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அரியலூரை சேர்ந்த 3 பேர், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவரும் இதில் அடங்குவர். கோயம்பேட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றிய இவர்கள், மார்க்கெட் மூடிய பிறகும், அங்கேயே தங்கியிருந்த நிலையில், தற்போது நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Doctor ,Corona Doctor ,Corona , Doctor, kills ,Corona
× RELATED பூசணி விதையின் பயன்கள்!