×

ஜெர்மன் நாட்டிலிருந்து சென்னைக்கு மருந்து பொருட்கள் பெயரில் போதை மாத்திரை கடத்தல்: பிரபல ஆன்லைன் நிறுவன ஊழியர் கைது

சென்னை: ஜெர்மன் நாட்டிலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் கூரியர் பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அந்த பார்சல்களில் ஒரு பார்சல் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கவிக்குமார் என்பவரின் பெயருக்கு வந்திருந்தது. பார்சலில் மருத்துவ பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில், அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களில் 100 மாத்திரைகள் இருந்தன. அவைகளை ஆய்வு செய்தபோது, அனைத்தும் மெத்தொகட்டமின் என்ற போதை மாத்திரைகள் என தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இதையடுத்து சுங்கத்துறை வழக்கு பதிவு செய்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தது. சுங்கத்துறையின் தனிப்படையினர் அந்த பார்சலில் உள்ள முகவரியான ஈரோடு சென்றனர். ஆனால், அந்த முகவரியில் கவிக்குமாரின் தாய் மட்டுமே இருந்தார். கவிக்குமார், பெங்களூருவில் உள்ள பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் பணியில் இருப்பதாக கூறினார்.

சுங்கத்துறையினர் பெங்களூரு சென்று அலுவலகத்தில் பணியிலிருந்த கவிக்குமார் (25) என்பவரை கைது செய்தனர். பிறகு சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர். சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணையில், கவிக்குமார் போதை மாத்திரைகளை பார்சலில் வரவழைத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இவர் மலேசிய குடியுரிமை பெற்றதும், அந்த தனியார் நிறுவனத்தில் பொருட்களின் தரக்கட்டுப்பாடு ஆய்வாளராக பணியாற்றுவதும் தெரியவந்தது. மேலும் இந்த போதை மாத்திரைகளை தனக்காக வாங்கினாரா அல்லது வேறு யாருக்காவது விற்பனை செய்ய வாங்கினாரா என்றும்,  மலேசியாவிற்கு கடத்தும் திட்டம் வைத்திருந்தாரா என்றும் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Tags : Chennai ,German , Drug trafficking, name , German products,Germany ,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...