×

டிக்கெட் பரிசோதனை, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி அறிமுகம்: சென்ட்ரல் ரயில்நிலையத்தில் அமைப்பு

சென்னை: ரயில்களில் பயணம் செய்யும்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ெசன்னை கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்களில் தானியங்கி டிக்கெட் பரிசோதனை மற்றும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி முதற்கட்டமாக சென்ட்ரல் ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கருவிகள் ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியில் செல்லும் வாயில்களில் வைக்கப்பட்டிருக்கும். டிக்கெட் பரிசோதனை செய்யும் கருவியில் வெப் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அந்த வெப்கேமரா முன்பு தங்களது டிக்கெட் மற்றும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.அப்போது பணியில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் திரையில் பார்த்து டிக்கெட்டை சோதனை செய்வார்கள். அடுத்தகட்டமாக உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு அந்த பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த வெப்கேமராவில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவியும் பொருத்தப்பட்டிருக்கும். பயணி குறிப்பிட்ட இடைவெளியில் அந்த கேமரா முன்பு நிற்கும்போது, அவரது உடல் வெப்பநிலை அதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் கருவி மூலம் சோதனை செய்யப்படும்.  உடல் வெப்பநிலை சீராக இருந்தால் திரையில் பச்சை நிற சிக்னல் கிடைக்கும். பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சிகப்பு சிக்னல் கிடைத்தால் பயண அனுமதி கிடையாது. மேலும் இந்த பரிசோதனை கருவிகளில் பயணிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விரைவில் குரல் வழி பதிவு அமைப்பு நிறுவப்படும். இந்த நவீன தொழில் நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகளை பரிசோதிக்கலாம். இதன் மூலம்   நுழைவு வாயிலில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். விரைவில் அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இக் கருவி அமைக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Tags : Introduction ,Central Railway Station , Ticket Testing, Body Temperature, Testing Equipment, Introduction
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது