×

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 3 மாதம் நிறைவு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்: ஊரடங்கு மட்டும் தான் தீர்வா?

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நேற்றுடன் 3 மாதம் நிறைவடைகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசும், சுகாதாரத்துறையும் திணறி வருகிறது. மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஊரடங்கு மட்டும்தான் தீர்வா? மாற்று யோசனை குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சீனாவில் உள்ள வுகான் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் 200 நாடுகளில் பரவி, அனைவரையும் வீட்டிலேயே முடக்கி போட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரையும் 5 கட்டங்களாக ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். தமிழகத்திலும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினத்துடன் 3 மாதம் முடிவடைகிறது.ஆனாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இப்படி நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கை தவிர பெரிய அளவில் எந்த மருத்துவமும் இல்லை என்ற நிலையே உள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்து கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் அல்லது சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுவது ஒன்றே தற்போதைய மருந்தாகும்.ஆனாலும், 90 நாட்களுக்கு மேலும் பொதுமக்களை வீட்டில் அரசு முடக்கி வைத்துள்ளதால், பொருளாதார நிலை மிகவும் மோசமாகி உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட செலவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமான பணிகளை செய்தால்தான் வருமானம் என்ற நிலையிலேயே தமிழகத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். தற்போது வேலையில்லாத சூழலில், இவர்களால் வாங்கிய கடனை அடைக்க கூட முடியாமல் உள்ளனர். இப்படியே ஊரடங்கு நீட்டித்தால் நம் நிலை என்னாகும்? என்ற கேள்வி அவர்களிடம் எழுந்துள்ளது.

ஏதோ ஒரு சில மாதம் மட்டும் வீட்டில் இருந்தால் கொரோனா ஒழிந்துவிடும் என்று நினைத்த மக்களிடம் தற்போது அந்த நம்பிக்கை இல்லை. காரணம், மார்ச் மாதம் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது தமிழகத்தில் ஒரே ஒரு கொரோனா நோயாளி தான் இருந்தார். ஆனால் 90 நாட்களுக்கு பிறகு இதன் எண்ணிக்கை 68 ஆயிரமாக  உயர்ந்துள்ளது. இடையில் இந்த தொற்று குறையவே இல்லை. முதல்வரும், இந்நோய் அதிகரித்துவிட்டுதான் குறையும் என்கிறார். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் அமைச்சர்கள் கூட ஜூலை மத்தியில் 2.75 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் திணறி வருகிறது. அதனால், ஊரடங்கை தவிர்த்து இந்த நோயை ஒழிக்க மாற்று யோசனை குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என்பதே தற்போது தமிழக மக்களின் கோரிக்கையாகும். குறிப்பாக, மார்க்கெட் போன்ற பகுதிகளில் கூட்டத்தை குறைக்க அதிக கவனம் செலுத்தினாலே நோயை ஓரளவு குறைக்க முடியும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். தமிழக அரசு மருத்துவ குழுவிடம் மட்டுமே ஆலோசனைகளை கேட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது. அதையும் தாண்டி யோசித்தால், நிச்சயம் நோயை கட்டுப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



Tags : Tamil Nadu , Uncontrolled Coronation, 3 months,curfew announced ,Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...