ஊரடங்கால் வேலை இல்லை.. சம்பளம் இல்லை.. சென்னையில் வசிப்பவர்களை தடையின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதியுங்கள்

* ஜூலை 1 முதல் அரசு கெடுபிடிகளை தளர்த்த கோரிக்கை

சென்னை: கொரோனா ஊரடங்கால் சென்னையில் உள்ள பலருக்கு வேலை இல்லை, சம்பளம் இல்லை. சொந்த ஊருக்கு செல்லவும் ஆயிரம் கெடுபிடிகள். அதனால் சென்னையில் வசிப்பவர்களை, ஜூலை 1ம் தேதியில் இருந்து எந்த தடையும் இல்லாமல் சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் ஆட்டோ, டாக்சி, வேன் ஓடவில்லை. சிறு, குறு உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும் குறைந்த அளவே ஊழியர்களை கொண்டு இயக்கப்படுகிறது. கடைகள் திறந்தாலும், பொருட்கள் வாங்க ஆள்இல்லை. காரணம், மக்களிடம் பணம் இல்லை. பள்ளிகளுக்கும் தொடர்ச்சியாக 4 மாதங்கள் விடுமுறை. இந்த விடுமுறை மேலும் சில மாதங்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் வசிக்கும் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊர் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றாலே கொரோனாவை கொண்டு வந்ததாக ஒதுக்கி வைக்கும் நிலை உள்ளது. முறையாக அரசின் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்லலாம் என்றால் அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால், திருடர்கள் போல் தப்பித்து செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து, சென்னையில் 20, 30 வருடங்களாக வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிலர் கூறியதாவது: சென்னை என்பது ஒரு ஊர் அல்ல, அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். பணியின் நிமித்தமாகவோ, பிழைப்பிற்கு வழி தேடியோ, படிப்பதற்காகவோ, பயிற்சி பெறுவதற்காகவோ தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் சென்னையில்  குடியேறி இருக்கிறார்கள். தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகவும் நெருங்கிய யாரோ ஒருவர் சென்னையில்தான் வசித்து வருகிறார். சென்னைக்கு சென்றிருக்கும் பலரும் அங்கே ஏதோ ஒரு சிறு தொழில் ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது நடைபாதை கடையாக இருக்கலாம், தள்ளுவண்டி வியாபாரமாக இருக்கலாம், மூட்டை சுமப்பவராக இருக்கலாம், தெரு, தெருவாக சென்று மீன் விற்பவராக இருக்கலாம், பழைய பேப்பர் கடையாக இருக்கலாம், இஞ்சி மிட்டாய் செய்து பிழைப்பவராக இருக்கலாம், பெரிய பெரிய துணிக்கடைகளில் பணிபுரிபவராக இருக்கலாம். இவர்களுக்கு சேர்ந்தால்போல் மூன்று தினங்கள் விடுமுறை கிடைத்தால் போதும் அடித்துப் பிடித்துக்கொண்டு சொந்த ஊர் வந்து சென்று விடுவார்கள். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று எந்த பண்டிகை வந்தாலும், அவர்கள் அந்த பண்டிகையைக் கொண்டாடாதவர்களாகக் கூட இருப்பார்கள்.

ஆனாலும் மூட்டை முடிச்சிகளைக் கட்டிக் கொண்டு, ரயிலிலோ, பேருந்திலோ அடித்துப் பிடித்துக் கொண்டு சொந்த ஊர் சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களிடத்தில், திடீரென்று 3 மாதமோ, அதற்கு மேலோ ஊரடங்கு என்று சொன்னால் என்ன செய்வார்கள், வேலை இல்லை, சம்பளம் இல்லை, வெளியே போக முடியாது, கடைகள் இல்லை, சாப்பாடுக்கு வழியில்லை. வீட்டு வாடகை பணம் கொடுத்துதான் ஆக வேண்டும். மின்சார கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும். மாற்று வழி வேறு என்ன இருக்கிறது? அதனால்தான் எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களின் வேர், அவர்களின் சொந்த மண்ணில்தான் இருக்கிறது. அவர்களின் பெற்றோர், அண்ணன், தம்பி, உற்றார் உறவினர் சொந்த ஊரில்தான் வசிக்கின்றனர். அவர்கள் வளர்ந்து, ஊர் சுற்றிய தெருக்கள் எல்லாம் கிராமங்களில்தான் இருக்கிறது. அதுதான் அவர்கள் உலகம்.. அவர்கள் தங்கள் உலகிற்கு (சொந்த கிராமத்திற்கு) இளைப்பாற வருகிறார்கள். தங்கள் தாய் தகப்பனோடு, அண்ணன், தம்பியோடு இருப்பதற்கு வருகிறார்கள். அவர்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள், தள்ளி வைக்காதிருங்கள். அவர்களை கெஞ்ச வைக்காதிருங்கள், காலில் விழ வைக்காதிருங்கள். அந்த பாஸ், இந்த பாஸ் என்று அலைக்கழிக்காதிருங்கள். வெளிநாட்டில் தவித்துக் கொண்டிருக்கிறவர்களை இங்கே அழைத்து வர சிறப்பு விமானங்களை அனுப்பி வைக்கிறோம்.

வசதியுள்ளவன் விமானத்திலும், காரிலும் வந்து சேர்ந்துவிடுவான். ஆனால் குடிசையில் முடங்கிக் கிடப்பவர்கள் என்ன செய்வார்கள், இவர்களை போன்றவர்களுக்கு அரசு பேருந்து வசதியாவது செய்து கொடுக்க வேண்டாமா, ஒவ்வொரு ஊரடங்கிற்கு முன்னாலும்,  இரண்டு நாட்கள் சாலைகளை திறந்தே வைத்திடுங்கள்.. எல்லா பேருந்துகளையும் ஓட அனுமதியுங்கள். அவர்களை பரிசோதித்துப் பார்த்து, தொற்று இல்லை என்பதை உறுதி செய்து விட்டு அவர்கள் சென்னையை விட்டு வெளியேற அனுமதியுங்கள். சதியில்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளிலும், வசதியுள்ளவர்கள் தனியார் பரிசோதனை நிலையங்களிலும் தன்னைப் பரிசோதித்துக் கொள்ள அனுமதியுங்கள். கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றுதான் இ-பாஸ் என்று அறிவியுங்கள். தொற்றில்லாதவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக இடம் பெயர அனுமதியுங்கள். இது அரசின் தலையாய கடமை. மக்களுக்காகத்தான் அரசு. தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டும். ஜூலை 1ம் தேதியில் இருந்து தமிழக மக்கள் அனைவரும் தமிழகத்திற்குள் எந்த மாவட்டத்திற்கும் எளிதாக சென்றுவர அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: