×

எமர்ஜென்சி கொண்டு வந்த காங்கிரஸ் ஜனநாயகம் குறித்து பேசுவது வேதனை அளிக்கிறது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: “பதவி மோகத்தில் எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி, ஜனநாயகம் குறித்து பேசுவது வேதனை அளிக்கிறது” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய பாஜ அரசின்  ஓராண்டு சாதனைகள் குறித்து  தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள் நலனுக்காக என்ன செய்துள்ளோம், என்பதை மக்களிடம் எடுத்து சொல்வதற்கு கட்சிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு நல்ல வாய்ப்பு. தனது பணியை மக்களிடம் விரிவாக எடுத்து சொல்வது கடமை. அந்த கடமையை செய்வதற்கு இந்த வருடம் கொரோனா தடையாக உள்ளது. கொரோனா காரணமாக, மக்களிடம் நேரில் செல்லவும், மக்களிடம் சென்று பேசும் வாய்ப்பையும் தடுத்து விட்டது. பிரதமர் மோடியின் முயற்சியால், கிராமத்தில் இணையதள வசதி வந்துள்ளது.

இதனால், நமது கருத்தை மக்களிடம் வைக்க முடிகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.இதே நாளில் தான், காங்கிரஸ் கட்சி, தனது பதவி ஆசைக்காக ஜனநாயகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியது. எமர்ஜென்சியை அமல்படுத்தி மக்களின் உரிமைகளை நிராகரித்தனர். பதவி மோகத்திற்காகவும், பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் எமர்ஜென்சியை கொண்டு வந்தனர். அப்போது, பலவித அராஜகங்கள் மூலம் எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்தது. அதே காங்கிரஸ், இன்று ஜனநாயகம் குறித்து பேசுவது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட திமுக ஆட்சியை, சட்டத்திற்கு விரோதமாக பதவியில் இருந்து நீக்கியது. அக்கட்சியை சேர்ந்தவர்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறையில் அடைத்து பல வித கொடுமைகளை செய்தனர். அவர்களுக்கு பலவித தொந்தரவுகளை கொடுத்தது. மக்களின் பேராதரவு காரணமாக, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். தனி மெஜாரிட்டியுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைத்ததற்கு பிரதமர் மோடியின் சாதனையே காரணம். தனியாக வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆட்சி தான் அமைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Nirmala Sitharaman ,Emergency Congress , Talking ,Emergency Congress,painful, Union Minister, Nirmala Sitharaman
× RELATED அமலாக்கத்துறை மூலம் மிரட்டி பணம்...