×

காங்கிரஸ் தலைவர்கள் சரமாரி தாக்கு ஆயுதங்கள் வெறுமனே வைத்திருப்பதற்கு அல்ல

புதுடெல்லி: ‘எல்லையில் ஆக்கிரமிக்கும் சீன ராணுவம் எப்படிப்பட்டாவது விரட்டப்பட வேண்டும். நமது ஆயுதங்கள் வெறுமனே வைத்திருப்பதற்காக அல்ல,’ காங்கிரஸ் தலைவர்கள் சரமாரியாக கருத்து தெரிவித்தள்ளனர். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கத்தில் இந்திய, சீன படையினர் மோதல் விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. மோதல் சம்பவத்திற்கு பிறகு பேச்சுவார்த்தை மூலம் எல்லையில் பதற்றம் தணிவதாக மத்திய அரசு கூறினாலும், இந்திய நிலப்பரப்பை ஒட்டி சீனாவின் கட்டமைப்புகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக, பாஜ, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பாஜ தேசிய தலைவர் நட்டா, சோனியா காந்தி குடும்பத்தினரை மறைமுகமாக தாக்கிய பேசிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பலர் நேற்று கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான அதிர் ரஞ்சன் சவுத்ரி டிவிட்டரில், ‘எல்லையில் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தலாகும். சீனாவை எல்லையில் இருந்து பின்வாங்கச் செய்ய இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். நம் ஆயுதங்கள் வெறுமனே வாங்கி குவிப்பதற்கல்ல. நாம் சீன ராணுவத்துக்குப் பதிலடி கொடுக்க வேண்டும், அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். இந்த மோதலின் போக்கைத் தீர்மானப்பதில் கடவுள் இந்தியர்கள் பக்கம் இருப்பார்,’ என கூறி உள்ளார்.

கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது டிவிட்டரில், ‘கல்வான் பள்ளத்தாக்கு முழுமையும் தங்களுடையது, தங்களின் இறையாண்மைக்கு உட்பட்டது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும், சீன ராணுவமும் சொந்தம் கொண்டாடி, இந்திய ராணுவத்தை வெளியேறக் கூறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு மாறாக, 2020, ஏப்ரல்-ஜூன் மாதங்களில் சீன ராணுவத்தினரால் எல்லையில் பதற்றத்துக்குரிய பொது எல்லைகள் மாற்றப்பட்டு மீறப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எல்லையில் பறிகொடுத்த பகுதிகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதில் மோடி அரசு வெற்றி பெறுமா என மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்,’ என்று கூறி உள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான பவன் கேரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘1962ம் ஆண்டு போர் நடந்தபோது பாஜ தலைவர் வாஜ்பாய் கோரிக்கையின்படி, அப்போதைய பிரதமர் நேரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டினார். அதேபோல், தற்போது லடாக் எல்லை விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்து ஒருமித்த முடிவு எடுக்க ஒரே வழி நாடாளுமன்றமே ஆகும்’’ என்றார். மற்றொரு செய்தி தொடர்பாளரான கவுரவ் கோகாய் கூறுகையில், ‘‘சீனாவுடன் வழக்கமான பேச்சுவார்த்தை எல்லாம் சரிப்படாது. அவர்களுக்கு வலுவான பதிலடி தர வேண்டும். வர்த்தகம் போன்ற பிற வழிகளிலும் சீனாவுக்கு அழுத்தம் தர வேண்டும். டோக்லாம் போன்ற இன்னொரு சூழலை இந்தியா கொண்டிருக்கக் கூடாது,’’ என்றார்.

Tags : leaders ,Congress , Congressional leaders, in the arsenal, are armed, not simply for possession
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...