×

ரஷ்யாவில் புடினை வாழ்நாள் அதிபராக்க மக்களிடம் வாக்கெடுப்பு தொடங்கியது: ‘ஓகே’யானால் 2036 வரை அசைக்க முடியாது

மாஸ்கோ: ரஷ்யாவில் விளாடிமிர் புடினை வாழ்நாள் முழுவதும் அதிபராக நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சீர்த்திருத்த சட்டத்தை கொண்டு வருவதற்கு, பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடங்கியது.   ரஷ்ய அதிபராக உள்ள விளாடிமிர் புடின் கடந்த 1999ம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்றார். பிறகு 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் மாபெரும் வெற்றி பெற்று 2வது முறை அதிபரானார். புடினின் பதவிக்காலம் 2024ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. ரஷ்ய அரசியலமைப்புபடி, தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபரான ஒருவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது. இது புடினுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததால், இருமுறைக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற தடையை நீக்கி அந்நாட்டின் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்தார். இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்துடன் நீதிபதிகளை பதவி நீக்குவது, நாடாளுமன்றத்தில் நிறைவேறப்பட்ட சட்டத்தை ரத்து செய்வது போன்ற அதிகாரங்களும் அதிபருக்கு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இது ஒரு சர்ச்சைக்குரிய சட்ட திருத்தம் என்பதால், பொதுமக்கள் கருத்தை கேட்டறிய பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக ரஷ்ய அரசு அறிவித்தது. கடந்த ஏப்ரல் 22ல் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஜூலை 1ம் தேதிக்கு தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், ஜூலை 1ம் தேதி வாக்கெடுப்பில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, முன்கூட்டியே ஒரு வாரத்திற்கு முன்பாக பொது வாக்கெடுப்பு நேற்று தொடங்கியது. இந்த வாக்கெடுப்பு ஒருவாரம் நடைபெற உள்ளது. ரஷ்யாவில் தற்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் பொது வாக்கெடுப்பு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்கெடுப்பில் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், 2036ம் ஆண்டு வரை புடின் அதிபராக நீடிக்க முடியும். தற்போது 67 வயதாகும் அவர் 83 வயது வரை அதிபராக இருப்பார்.

ஜின்பிங் பாணியில் புடின்
உலகில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும், சீனாவும் மிகவும் பலம் வாய்ந்தவை. இரண்டும் வல்லரசு நாடுகளும் கூட. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், தனது நாட்டின் அரசியல் சட்டத்தை கடந்த 2018ல் திருத்தம் செய்து வாழ்நாள் அதிபராகி விட்டார். அதே போல், ரஷ்ய அதிபர் புடினும் இந்த அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் வாழ்நாள் அதிபராக போகிறார்.

Tags : Russia ,referendum ,Putin ,lifetime president , Putin's referendum,Russia's,lifetime,president begins
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...