×

குணமடைந்த 50 பேரை வீட்டுக்கு அழைத்து செல்ல மறுப்பு; கொரோனா இல்லையினு சர்டிபிகேட் கொடுங்க..! ஐதராபாத் மருத்துவமனையில் உறவுகள் ‘அடம்’

ஐதராபாத்: கொரோனா தொற்று பாதித்து குணமடைந்த 50 பேரை வீட்டுக்கு அழைத்து செல்ல மறுப்பு ெதரிவித்து வருவதால், ஐதராபாத் மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் ெகாரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், கொரோனாவால் பாதித்த 50 பேருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், அவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா இல்லை என்று சர்டிபிகேட் கொடுத்தால்தான் அழைத்து செல்வோம் என்று சம்பந்தப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தார் கூறிவருகின்றனர். அதனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து காந்தி மருத்துவமனையின் தலைமை அதிகாரி டாக்டர் பிரபாகர் ராவ் கூறியதாவது: குணமடைந்த 50 கொரோனா நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்து வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என 50 நோயாளிகள் உள்ளனர். கடந்த 10 முதல் 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தற்போது அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனர். அறிகுறிகள் எதுவும் இல்லை. நாங்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி, தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தினோம். ஆனால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல மறுத்து வருகின்றனர். இந்த 50 நோயாளிகளில் பலர் மருத்துவமனைக்கு வெளியே குடும்ப உறுப்பினர்கள் அழைத்து செல்வார்கள் என்ற நிலையில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.

அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த எவரும் அவர்களை அழைத்துச் செல்ல வராதநிலையில், ​​நாங்கள் அவர்களை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து தங்குவதற்கு படுக்கை வசதிகளை வழங்கினோம். நோயாளிகளின் குடும்பத்தினர், பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தி சர்டிபிகேட் கேட்கின்றனர். ‘நெகடிவ்’ என்பதை உறுதிப்படுத்த சோதனை செய்யும்படி கேட்கின்றனர். இந்த சிக்கலான சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்வது சாத்தியமில்லை’ என்றார்.

Tags : home ,Hyderabad Hospital ,Adam , Corona No, Certificate, Hyderabad Hospital
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...