×

காவிரிப்பாசன மாவட்டங்களின் கடைமடைப்பகுதிக்கு நீர் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!!

சென்னை: காவிரிப்பாசன மாவட்டங்களின் கடைமடைப்பகுதிக்கு நீர் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறித்தி உள்ளார். தமிழகத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தும் இன்னும் கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீர் போய்ச் சேரவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. அணை திறக்கும் போதே காவிரி கடைமடைப் பகுதிகளுக்கும் குறுவைச் சாகுபடிக்கு  நீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக பெயரளவில் அறிவித்து - அதை மேற்பார்வையிட ஒரு கமிட்டியை அ.தி.மு.க. அரசு அமைத்ததே தவிர உண்மையிலேயே தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவோ அல்லது முறைப்படி முழுமையாகத் தூர்வாரவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

கடைமடைக்குக் காவிரி நீர் வரவில்லை என்று டெல்டா விவசாயிகள் கதறுவதை முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இதுவரை கண்டுகொள்ளவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 10,000 கன அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படுவதால்- காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் நனைவதற்கு மட்டுமே அந்த நீர் பயன்படுகிறது. குறுவை விவசாயப் பணிகள் முழுமைக்கும் முறையாக நீர்ப்பாசனம் கிடைப்பதென்றால் குறைந்தபட்சம் தினமும் 15,000 கன அடி நீர்  திறந்துவிடப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் ஒருமனதான கோரிக்கையாக இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் கர்நாடகாவிடமிருந்து தண்ணீரைப் பெறுவதற்கு உரிய முயற்சிகளை முதலமைச்சர் இதுவரை மேற்கொள்ளவும் இல்லை.

திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரும் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. கடைமடைப் பகுதிவரை நீர் செல்வதற்குச் சாளுவன் ஆற்றை உடனே தூர்வாருங்கள் என்று கோரிக்கை விடுத்து கோட்டூர் ஒன்றியத்தில் ஆற்றில் இறங்கிப் போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பி மட்டும் 9197 ஏக்கர் நிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்காக வழக்கம் போல் பல அறிவிப்புகளை அதிமுக அரசு வெளியிட்டிருந்தாலும், அவை வெற்று காகித அறிவிப்புகளாகவே இருக்கின்றன. குறிப்பாக, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன் வழங்கப்படுவதில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,DMK ,government ,districts ,Karippasana ,Tamil Nadu ,shop floor , Cauvery Water, Shop Area, Government of Tamil Nadu, Action, MK Stalin, Report
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...