×

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய கோரி நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி கடிதம்

சென்னை: மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி எம்.பி. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி 27-3-2020, 23-05-2020 ஆகிய நாட்களில் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, வங்கிக் கடன், கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட கடன்களின் தவணையைச் செலுத்துவதற்கு மார்ச் முதல் ஆகஸ்டு வரை ஆறு மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், வங்கிகளிலும் மைக்ரோ நிதி நிறுவனங்களிலும் வாங்கிய கடனுக்கான தவணைகளைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துகிறார்கள் என்று மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் இருந்து முறையீடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை மீறி வங்கிகளும், மைக்ரோ நிதி நிறுவனங்களும் இப்படிக் கட்டாயப்படுத்துகின்றன.

இந்த நிலைமையை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். மேலும், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்த நெருக்கடியான மாதங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் அனைத்து வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வது பற்றி பரிசீலிக்கக் கோருகிறேன் என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.Tags : Kanimozhi MP ,groups ,Nirmala Sitharaman ,Womens Self Help Group ,Kanimozhy , Kanimozhy, Letter, Womens Self Help Group
× RELATED கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட...