×

கொரோனா பரவல் அதிகரிப்பு; குமரியில் இருந்து வெளி மாவட்டத்திற்கு இயக்கிய பஸ்கள் ரத்து

நாகர்கோவில்: கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து குமரியில் இருந்து வெளி மாவட்டத்திற்கு இயக்கிய பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வசதியாக 3 பஸ்கள் நெல்லைக்கு இயக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டத்திற்கு வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று மட்டும் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயக்க அரசு அனுமதிவழங்கி இருந்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லைக்கு 23 பஸ்களும், பாபநாசத்திற்கு 2ம், தூத்துக்குடிக்கு 2ம், திருச்செந்தூருக்கு 10 பஸ்களும் அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. பிற மண்டலத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவரகள் நெல்லை வரை கார் அல்லது வேன் மூலம் வந்து பின்னர் நெல்லையில் இருந்து அரசு பஸ்கள் மூலம் குமரிக்கு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழக முதல்வர் நேற்று மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்களை இயக்கவேண்டும். மற்ற மாவட்டத்திற்கு பஸ் போக்குவரத்து இயக்ககூடாது.

மேலும் மண்டலத்தில் உள்ள மாவட்டத்தை விட்டு பிற மாவட்டத்திற்கு செல்லும்போதும் கண்டிப்பாக இ-பாஸ் இருக்கவேண்டும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்திற்கு இன்று முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனால் அரசு ஊழியர்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து காலை 7.30, 8, 8.30 மணிக்கு என 3 பஸ்கள் திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் அரசு ஊழியர்கள் தங்களது அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்திற்குள் 30 சதவீதமான 230 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : corona spread ,district ,Kumari ,spread ,Corona , Corona spread, Kumari, outer district, buses, cancellations
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...