×

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் மரணத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல்

சென்னை: தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல் என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை வணிகர் சங்கம் நடத்தும் முழு கடையடைப்பிற்கு அனைவரும் ஆதரவு அளித்துள்ளதால் மருந்து வணிகர்கள் சங்கம் கடையடைப்பை அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, சிறையில் வைத்து போலீசார் தாக்கியதே அவர்கள் இருவர் உயிரிழப்புக்கும் காரணம் என்றும் இருவரையும் அடித்துக் கொன்ற போலீசார் மீது இரட்டைக் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வியாபாரிகள் நேற்று உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, நீதித்துறை மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனிடையே, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற செய்தியை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மருந்து வணிகர்கள் சங்கமும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகளை மூட ஆதரவளித்துள்ளனர்.

Tags : Closing ,drug stores ,Tamil Nadu ,Drugstore Closure , Satanagulam, merchants, death, tamil, drug stores, closure
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...