×

ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர், கர்ப்பிணி உட்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி

வேடசந்தூர்: தமிழகத்தில் முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் உட்பட ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மொத்தம் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் இம்மாவட்டங்களில் மக்கள் பீதியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே நல்லூரை சேர்ந்த 22 வயது வாலிபர், திருப்பூரில் 108 ஆம்புலன்சில் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 15ம் தேதி ஊருக்கு வந்து விட்டு திருப்பூர் சென்றபோது திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியானதால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர், கொரோனாவுக்கு பலியாவது இதுவே முதல்முறை.

இது சக ஊழியர்களிடையேயும், அவரது சொந்த ஊரிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த வாலிபரின் உறவினர் கூறுகையில், ‘‘இவரது பெற்றோர் விவசாயக்கூலிகள். ஒரு சகோதரர் காரைக்காலில் திருமணம் முடித்தும், சகோதரி சென்னையில் போலீசாகவும் பணியாற்றி வருகிறார். மற்றொரு மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரி, பெற்றோரை இவர்தான் பார்த்து வந்தார். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளும் விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது கொரோனாவால் உயிரிழந்துள்ளது எங்கள் குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது’’ என்றார்.

திருப்புவனத்தை சேர்ந்தவர் பலி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த 47 வயது நபர், கடந்த 18ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பிற்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 19ம் தேதி பரிசோதனையில் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா சிறப்பு வார்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 23ம் தேதி சிங்கம்புணரி அருகே ஜமீன்தார்பட்டியை சேர்ந்த 49 வயது நபர், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாவது உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.

பரமக்குடியில் பெண் பலி
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதி நகரைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

கர்ப்பிணி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் முதன்முதலாக சென்னையில் இருந்து வந்து கோவில்பட்டி சோதனை சாவடியில் தொற்று உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் இறந்த வாலிபர், இரண்டாவது சிவகாசியை சேர்ந்த பெண் 4 நாட்களுக்கு முன் உயிரிழந்தார். நேற்று முன்தினம் மூன்றாவதாக சாத்தூரை சேர்ந்த 60 வயது ஆண், நான்காவதாக சிவகாசியை சேர்ந்த 80 வயது முதியவர் இறந்தனர்.
நேற்று விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த 34 வயதான 7 மாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Tags : ambulance workers ,districts ,Ramanathapuram ,Dindigul ,Virudhunagar ,Sivaganga ,persons , Ramanathapuram, Sivaganga, Dindigul, Virudhunagar, 108 ambulance employee, pregnant, 4 people
× RELATED அமோனியம் நைட்ரேட்டை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற திட்டம்