×

ஆற்காடு அருகே கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

ஆற்காடு: ஆற்காடு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதிக்கு லாரி மற்றும் லோடு வேன் மூலம் கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசியை நேற்று போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரி மூலம் டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகி தலைமையிலான போலீசார் ரத்தினகிரி தேசிய நெடுஞ்சாலை அரப்பாக்கம் அருகே  சோதனைச் சாவடி வழியாக சென்ற லாரி மற்றும் லோடு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். கோதுமை மற்றும் மைதா மாவு எடுத்து செல்வதாக லாரியில் உள்ளவர்கள் கூறி உள்ளனர்.

ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் மேற்கண்ட வாகனங்களை சோதனையிட்டதில் அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம், சிறு காவேரிப்பாக்கம் பகுதியிலிருந்து கர்நாடக மாநிலம் கோலாருக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரி மற்றும் லோடு வேனை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 22 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

மேலும் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரான சிறு காவேரிபாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஜானகிராமன்(36), உடன் வந்த ஆண்டாள் நகர் பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜன் (21), லோடு வேனை ஓட்டி வந்த சிறு காவேரிப்பாக்கம் பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சந்திரன்(66) ஆகிய 3 பேர் மீது ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, லோடு வேனை பறிமுதல் செய்தனர்.


Tags : Karnataka ,lorry ,Arcot 22 , Arcot, Karnataka, truck, ration rice seized, 3 arrested
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...