×

தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்ட கொரோனா

வேலூர்: நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகளை கொரோனா பாதிப்பில் இருந்து தூக்கி நிறுத்த ₹5 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இன்னும் செயல்முறைக்கு வராததால், தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை தொலைத்த நிலையில் விழிபிதுங்கி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன. நாட்டில் அடித்தட்டு மக்களின் குறிப்பிட்ட சதவீதத்தினரின் வாழ்வாதாரம் நடைபாதை வியாபாரத்தின் மூலமே நடத்தப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் பெரு நகரங்கள், நகரங்களில் மட்டுமே நடைபாதை வியாபாரிகள் இருந்த நிலையில், காலத்தின் மாற்றத்தால் இன்று கிராமப்புறங்களிலும் நடைபாதை வியாபாரிகள் வியாபித்துள்ளனர்.

இத்தொழிலில் படிப்பறிவற்றவர் தொடங்கி ஆராய்ச்சி படிப்புகளை படித்தவர்கள் கூட வேலைவாய்ப்பின்றி நடைபாதை வியாபாரத்தை தொழிலாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்று நாடு முழுவதும் மத்திய அரசின் கணக்கின்படி 4 கோடிக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். குறிப்பாக நடைபாதை வியாபாரம் என்பது தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகம். வடமாநிலங்களை பொறுத்தவரை மகாராஷ்டிரா, டெல்லி ஆகியவற்றில் நடைபாதை வியாபாரிகள் அதிகம். தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளும் உள்ளனர்.

இவர்கள் பழ விற்பனை, பொம்மைகள் விற்பனை, தின்பண்டங்கள் விற்பனை, சிற்றுண்டி வியாபாரம், எண்ணெயில் பொரித்த சைவ, அசைவ உணவு விற்பனை, ஆயத்த ஆடை விற்பனை, பழரச விற்பனை, காய்கறி விற்பனை என பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தினமும் காலையில் தனியாரிடம் கடன் பெற்று முதல் வைத்து வியாபாரத்தை முடித்து மாலையில் அக்கடனை தின வட்டியுடன் திரும்ப செலுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் தினமும் இவர்களது வியாபாரம் முழுமை என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையில், ெகாரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 25ம் தேதி தொடங்கி கடந்த 80 நாட்களில், சமூகத்தின் மற்ற பிரிவுகளை போலவே இவர்களின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.

வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை, அதனால் திரும்ப கடன் பெற்று தொழிலை தொடங்க முடியாத பரிதாபம் என இடியாப்ப சிக்கலில் நடைபாதை வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் ஊரடங்கால் நலிந்துபோன பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த மத்திய அரசு 20 லட்சம் கோடி நிவாரணத்தை அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தது. இதில் நாடு முழுவதும் 50 லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு தலா 10 ஆயிரம் சிறப்பு மூலதன கடன் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதற்காக அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனால், தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் எந்த நடைபாதை வியாபாரிக்கும் வங்கியில் இருந்து 10 ஆயிரம் கடன் வழங்கப்பட்டதாக தகவல் இல்ைல என்கின்றனர் நடைபாதை வியாபாரிகள்.  

இதுதொடர்பாக முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மத்திய அரசு நடைபாதை வியாபாரிகளுக்கு அறிவித்த 10,000 சிறப்பு மூலதன கடன் தொடர்பாக இன்னும் எவ்வித தகவலும் வங்கிகளுக்கு வரவில்லை’ என்று முடித்துக் கொண்டனர்.  நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘நாங்கள் மத்திய அரசு அறிவிப்பு வெளியான சில நாட்களில் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். ஆனால், எங்களுக்கு தகவல் வரவில்லை. நாங்களும் தொடர்ந்து வங்கிகளின் படிகளை ஏறி இறங்கி வருகிறோம். ஆனால் சிறப்புக்கடன் கிடைத்தப்பாடில்லை’ என்று ேவதனை தெரிவித்தனர்.

எனவே, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நடைபாதை வியாபாரிகளுக்கு மத்திய அரசு அறிவித்த சிறப்பு மூலதன கடனை வழங்கி அவர்களை தூக்கி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகர விற்பனைக்குழுவில் இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை
தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும் 482 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இப்படி
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போது, அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி கந்துவட்டியால் பாதிக்கப்பட்டுள்ள நடைபாதை வியாபாரிகளை காக்கும் வகையில், தினசரி வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, காலையில் பணத்தை பெற்றுக் கொண்டு மாலையில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் இதற்கு வட்டி கிடையாது எனவும் கூறப்படுகிறது. இந்த முறை இப்போதும் அங்கு தொடர்ந்து வருகிறது.

அடையாள அட்டை பெற்ற நடைபாதை வியாபாரிகள்
* சென்னை மாநகராட்சி 23,135 பேர்
* நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1,03,049 நடைபாதை வியாபாரிகள்
* மொத்தம் 1.26 லட்சம் நடைபாதை வியாபாரிகள். 


Tags : Corona ,pavement traders ,Tamil Nadu , Tamil Nadu, Pavement Dealers, Livelihood, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...