×

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!!!

டெல்லி : உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கின் பின்னணி

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை

இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு 2017 டிசம்பரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து அவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கவுசல்யா முடிவு

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்துப் பேசிய கவுசல்யா, “உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தந்தை சின்னசாமியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக்கொள்வேன்.கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைத்தால் தான் சங்கருக்கான நீதி கிடைக்கும். எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பார். இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

கேவியட் மனு


இந்நிலையில், உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தனது விடுதலைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டால் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என்று அந்த மனுவில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி குறிப்பிட்டுள்ளார்.


Tags : Kaushalya ,Chinnaswamy ,Supreme Court Kaushalya ,Supreme Court ,Caucasian , Udumalai, Shankar, Murder, Case, Liberation, Kausalya, Father, Chinnasamy, Supreme Court, Cavite Petition
× RELATED திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து...