×

வைரஸ் தொற்றால் வாழ்வாதாரம் பாதிப்பு: இழந்த சுற்றுலா பெருமையை இளவரசி பூமி மீட்டெடுக்குமா?

* கட்டணச்சலுகையை அரசு அறிவிக்க வேண்டும்  
* புதிய சுற்றுலாத்தலங்களால் வருகை அதிகரிக்கும்

கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசி’, ‘தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் கொடைக்கானலை ஒரு நிமிடம் மனதில் எண்ணிப்பாருங்கள். குளுகுளு சூழல், மலை முகடுகளை தழுவி செல்லும் மேகக்கூட்டங்கள், பசுமை பள்ளத்தாக்கு போன்ற பல விஷயங்கள் மனதில் வந்து போகும். உற்சாகம் பொங்க மக்களுக்கு கழிய வேண்டிய கோடை விடுமுறையை, இம்முறை கொரோனா பறித்து விட்டது. இதை விட மிக முக்கியமாக, சுற்றுலாத்தொழில் முடக்கத்தால் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, இழந்த பொருளாதாரம், வாழ்வாதாரத்தை மீட்பதற்கான முயற்சியில், அரசு உடனடியாக இறங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சுற்றுலாத்துறை சுறுசுறுப்பாகுமா... கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழாக்களை சுற்றுலாத்துறை நடத்தும். விழாக்கள் இல்லாமலே இந்த ஆண்டு, சீசன் காலம் முடிந்து விட்டது. கொரோனா ஊரடங்கு எப்போது விலகும் என தெரியவில்லை. கொரோனா பிரச்னைகள், ஊரடங்கு எல்லாம் முடிந்த பின் கொடைக்கானலில் சுற்றுலா மேம்பாட்டிற்காக சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக இரண்டாம் கட்டமாக சிறப்பு விழாக்களை நடத்தலாம் என இப்பகுதி வர்த்தகர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் டிசம்பர் மாதத்தில் குளிர்கால விழாக்கள், ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாக்களை கோலாகலமாக நடத்தினால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும். இதை நம்பியுள்ள சுற்றுலா தொழிலும் மேம்படும் என்கின்றனர். ஊரடங்கு காலத்துக்குப் பிறகான கொடைக்கானலில் சுற்றுலா மேம்பாட்டுக்கான வழிமுறைகள் குறித்து சுற்றுலாத்தொழில் சார்ந்து இயங்குவர்களின் கருத்துகள் வருமாறு...

வளப்படுத்துமா வனத்துறை : வனப்பகுதியில் மலையேற்ற சுற்றுலா மூலம் பயணிகளை அனுமதித்து உரிய கட்டணங்களை பெற்று மேம்படுத்தலாம். வனப்பகுதியில் அந்த பகுதிக்கு ஏற்ப இயற்கையான முறையில் குடில்கள் அமைத்து தங்குவதற்கு சூழல் சுற்றுலா நடத்தலாம். இதேபோல் மூலிகை சுற்றுலா நடத்தலாம். மேலும் கொடைக்கானல் பேரிஜம் ஏரி, மன்னவனூர் ஏரியில் படகு சவாரி செய்ய பயணிகளை அனுமதிக்கலாம். வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள தூண்பாறை, மோயர் முனை, குணா குகைகள் உள்ளிட்டவைகளுக்கு பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும்.
கட்டண சலுகை தரலாமே... தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில்தான் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை உள்ளன. இந்த பூங்காக்களுக்கு செல்வதற்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களை குறைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்புச்சலுகை கட்டணங்களை வழங்கினால் அதிகளவிலான பயணிகள் வந்து செல்ல வாய்ப்பு உள்ளது.

கொடைக்கானல் நகராட்சி சார்பில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கலாம். குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். கொடைக்கானல் வில்பட்டி, தாண்டிகுடி, அடுக்கம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஆதிமனிதர்கள் தங்கிய கற்திட்டைகள் உள்ளன. இவற்றை காண சிறப்பு பேக்கேஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தலாம். சிறப்பு பஸ்களை இயக்கினால் சிறப்பு: கோடை சீசன் காலத்தில் மட்டும் சுற்றுலா இடங்களை காண்பதற்கு சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கி வருகிறது. இந்த ஆண்டு தடை உத்தரவால் சீசன் காலம் முடிந்துவிட்டது. வரும் காலங்களில் குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் சுற்றுலாத் தலங்களை குறைந்த செலவில் கண்டு மகிழ்வதற்கு சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்க வேண்டும்.

கொஞ்சம் சிந்திக்கலாமே... சுற்றுலாத்தொழிலை மேம்படுத்த, கொடைக்கானலில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர்கள், உணவு விடுதி உரிமையாளர்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டண தளர்வுகள் அளிக்க வேண்டும். கட்டண சலுகைகளையும் வழங்க வேண்டும். டாக்ஸி, வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள், கூடுதல் கட்டணத்தை தவிர்த்து, குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். மேலும் கொடைக்கானல் குதிரை ஓட்டுநர்கள், சைக்கிள் கடை நடத்துபவர்கள், கட்டண சலுகைகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும். சுற்றுலாத்துறை அல்லது தனியார் துறை சார்பில் கொடைக்கானலில் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக தீம் பார்க், சிறுவர் விளையாட்டு அரங்கங்கள் அமைக்க வேண்டும். இவையெல்லாம் சுற்றுலா மேம்படுத்துவதற்கு ஒரு சிறிய வழிகாட்டுதல்கள் தான். இவை நடைமுறைக்கு வரும்பட்சத்தில் சுற்றுலாத்தொழில் மீண்டு, இளவரசி பூமி இழந்த பொலிவை மீண்டும் பெறலாம். மாவட்ட நிர்வாகம், அரசு யோசிக்குமா?

ஓகே சொன்னா....ஓஹோன்னு இருக்கும்
திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன்: கொடைக்கானலில் இந்த ஆண்டு ஏப்ரல், மே கோடை சீசன் முடிந்து விட்டது. மீண்டும் சுற்றுலா புத்துயிர் பெற அடுத்து வரும் காலங்களில் குளிர்கால விழா, பொங்கல் விழா உள்ளிட்ட விழாக்களை நடத்துவதற்கு மாவட்ட கலெக்டரின் பரிந்துரைப்படி அரசுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த விழாக்கள் நடத்தப்படும். இதன்மூலம் கொடைக்கானலில் சுற்றுலா தொழில் மேம்பட வழிவகுக்கும்.

‘25% பேரை அனுமதிக்கலாம்’
கொடைக்கானல் சமூக ஆர்வலர் வீரபத்திரன்: கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதத்தில் சிறப்பாக நடக்கும் கோடை விழாவின் வருவாயை வைத்துதான் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளோர் அடுத்த 10 மாதங்களை கடத்துவர். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் எதுவுமே நடக்காமல் போய்விட்டது. கொரோனா பாதிப்பு நீங்கியதும், கொடைக்கானலுக்கு முதற்கட்டமாக தீவிர சோதனைக்கு பின் 25 சதவீத சுற்றுலாப்பயணிகளை தகுந்த பாதுகாப்புடன் அனுமதிக்க வேண்டும். அனுமதி பெற்ற தங்கும் விடுதிகளில் சுமார் 30 சதவீதம் பேர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும். வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் சென்று வர அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்குமிடத்திற்கு திரும்ப வேண்டும். சிவப்பு மண்டலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க கூடாது. இந்த முயற்சிகளை உடனே முன்னெடுத்தால் கொடைக்கானலில் சுற்றுலா ெதாழில் மீண்டும் உயிர் பெறுவது நிச்சயம்.

சாப்பாடுக்கு சலுகை தரலாம்
கொடைக்கானல் ஹோட்டல் அண்ட் ரெஸ்டாரண்ட் சங்க செயலாளர் ஜின்னா: கொடைக்கானலில் மூடப்பட்ட அனைத்து ஓட்டல்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறை மீறிய ஓட்டல்களை வரைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டல் அமைப்பின் சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்கு உணவு, தங்குவதற்கு சலுகைகளை அறிவிக்கலாம். இதுபோன்று செய்தால் சுற்றுலா மேம்படுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.

உற்சாகம் தருமே உணவுத்திருவிழா
கொடைக்கானல் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஸ்ரீதர்: கொரோனா தொற்று பிரச்னை நீங்கியவுடன் கொடைக்கானலில் இடைக்கால சுற்றுலா விழா நடத்த வேண்டும். தங்கும் விடுதி, உணவகங்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அந்தந்த நிர்வாகத்தினர் வழங்கி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். உணவு விடுதி உரிமையாளர்கள் ‘புட் பெஸ்டிவல்’ (உணவு திருவிழா) நடத்த வேண்டும். நோய் தொற்று குறைந்த மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகளை தகுந்த ஆய்வுக்கு பின்னர் கொடைக்கானலுக்கு அனுமதிக்கலாம்.


Tags : Princess ,Earth , Coronavirus, Lifestyle Impact, Princess Earth
× RELATED சுற்றுலா பயணிகளின் வசதிக்காக;...